கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அதன் பரவல் குறித்த தேசிய ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் ஆஸ்திரேலிய அரசின் அமைச்சரவைக்கூட்டத்துக்கு நியூஸிலாந்து பிரதமரையும் அழைத்துள்ளார் பிரதமர் ஸ்கொட் மொறிஸன்.
நாளை இடம்பெறவுள்ள இந்தக்கூட்டத்துக்கு பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தனது உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அடுத்து அங்கு கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எவரும் அவசர சிகிச்சைப்பிரிவில் தற்போது இல்லை. நான்கு பேர் மாத்திரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இதேவேளை, ஆஸ்திரேலியாவிலும் கணிசமானளவு வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதோடு கடந்த சில வாரங்களாக அரசு மேற்கொண்ட தனிமைப்படுத்தல் தொடர்பான கட்டுப்பாடுகள் சிறந்த பெறுபேறுகளை வழங்கியிருக்கிறது.
இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளை திறப்பது மற்றும் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய செயலி குறித்து பேசுவது ஆகியவை தொடர்பில் நியூஸிலாந்து பிரதமருடனும் பேசுவதற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Share
