சவுதி அரேபியாவின் புலம்பெயர்ந்த ஊடகவியாலாளர் ஜமால் கசோஜியின் படுகொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமட் பின் சல்மானின் நேரடித்தொடர்பிருப்பதற்கான நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறப்பு விசாரணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோர் 2 ஆம் திகதி துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக கருதப்படும் ஊடகவியலாளர் ஜமால் கஸோஜி தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணைக்குழு மேற்கொண்ட தடயவியல் அறிக்கை நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.
சுமார் நூறு பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் இவ்விசாரணைக்குழு பல அதிர்ச்சிதரும் தகவல்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
ஜமால் கசோஜியின் மீதான படுகொலையை சவுதி அரசு மிகவும் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டுள்ளது என்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் பிரகாரம் அந்தக்கொலைக்கான பொறுப்பை சவுதி அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கிடைக்கப்பெற்றுள்ள நம்பகரமான ஆதாரங்களின் பிரகாரம் சவுதி இளவரசர் விசாரிக்கப்படவேண்டும் என்றும் ஐ.நா. விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
துருக்கி நாட்டு புலனாய்வுத்துறையினரின் இரகசிய ஒலிப்பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை வைத்து பார்க்கும்போது - ஜமால் கஸோஜி சவுதி தூதரகத்துக்குள் சென்றவுடன் அவருக்கு மயக்க மருந்து ஏற்றப்பட்டு அதன் பின்னர் அவரது முகத்தை பொலித்தீன் பையொன்றினால் மூடிக்கட்டி மூச்சு திணறடிக்கப்பட்டதன் மூலம் சாகடிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை நடைபெற்று கடந்த எட்டு மாதங்களில் சவுதி அரசும் சரி - துருக்கி அரசும் சரி மேற்கொண்ட விசாரணைகள் காத்திரமானதாக இல்லை என்றும் உண்மையை வெளிக்கொண்டுவருவதில் இரண்டு நாடுகளுக்குமே கரிசனையெதுவும் இருப்பதாக தெரியவில்லை என்றும் விசாரணைக்குழு கூறியுள்ளது.
இந்த கொலை தொடர்பாக ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் சர்வதேச விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய அங்கத்துவ நாடுகளின் ஆணை இல்லாமல் அவ்வாறு உத்தரவிடும் அதிகாரம் ஐ.நா பொதுச்செயலாளருக்கு இல்லை என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
Share
