துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து படுகொலைசெய்யப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஐந்து பேருக்கு சவுதி நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது தொடர்பாக Amnesty International-சர்வதேச மன்னிப்புச்சபை தனது ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளது.
மூடிய அறையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஐவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதானது நீதியின் அடிப்படையை கேள்விக்கு உட்படுத்துவது என்பது மட்டுமல்லாமல், இந்த விசாரணை தொடர்பிலான வெளிப்படைத்தன்மை யாருக்கும் தெரியக்கூடாது என்று திட்டமிட்டு மூடிமறைக்கபட்டிருக்கிறது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
கஷோக்ஜியின் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நாவின் விசேட நிபுணர்குழு தலைவர் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போது - இந்தக்கொலையில் சவுதி இளவரசருக்குள்ள தொடர்பினை மறைப்பதற்கும் அவரை சட்டத்திடமிருந்து காப்பாற்றுவதற்குமாக ஐவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விசாரணையில் வெளிப்படைத்தன்மை பேணப்படாதவரையில், குற்றத்தின் சூத்திரதாரி சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார் என்ற விடயத்தை நாம் மறுத்துவிடமுடியாது- என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி இடம்பெற்ற ஜமால் கஷோக்ஜியின் படுகொலை தொடர்பில் சவுதி இளவரவருக்கு நேரடி தொடர்பிருப்பதாக துருக்கி அரசு குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
