'ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ள காட்டுத்தீ அனர்த்தமானது அந்தக்கண்டம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற பிரதேசம் அல்ல என்பதை மீளுறுதிப்படுத்தியிருக்கிறது. கடவுளால் படைக்கப்பட்ட அந்தக்கண்டம் யாருக்கும் பயனுடையதாக இல்லை என்பதால் கடவுளால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது'- என்று பிரித்தானியாவின் தொலைக்காட்சி பிரபலம் Jeremy Clarkson கூறியதை அடுத்து அவருக்கு எதிராக பலத்த கண்டனக்குரல்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.
The Sun பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் அவர் மேலும் தெரிவிக்கும்போது - "ஆஸ்திரேலியா எனப்படுகின்ற கண்டம் கடவுள் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக பல உயிரினங்களுடள் படைக்கப்பட்ட பிரதேசம் ஆகும். அங்குள்ள விசித்திர உயிரினங்களினால் யாருக்கும் தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அங்கு யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அந்தக்கண்டத்தை சுண்ணக்கல் பாறைகளால் கடவுள் மறைத்துவைத்தார்".
"லட்சக்கணக்கான ஆண்டுகளாக அந்தக்கண்டம் யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கப்டன் குக் சென்று அங்கு இறங்கிய பின்னர், கடவுளால் படைக்கப்பட்ட அந்த பிரதேசம் அனைவருக்கும் தெரியவந்தது. இது கடவுளுக்கு தெரிய வந்த காரணத்தினால், அவர் மிகுந்த அவமானத்துக்கு உள்ளாகி அந்த கண்டத்தை எரிந்துவிடுவதற்கு தீர்மானித்துவிட்டார். ஆக, ஆஸ்திரேலிய என்ற கண்டம் மனிதர்கள் வாழ்வதற்கு உகந்தது அல்ல என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்" -என்று கூறியுள்ளார்.
காட்டுத்தீயினால் ஆஸ்திரேலிய பேரிடருக்கு உள்ளாகியுள்ள நிலையில் Jeremy Clarkson இவ்வாறு எழுதியுள்ளமை குறித்து, அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பலத்த கண்டனம் எழுந்துள்ளது.
