SKIP TO MAIN CONTENT

தண்டனைபெற்ற தமிழ் அகதிக்கு விசா வழங்கக்கோரினாரா? சர்ச்சையில் NSW எதிர்க்கட்சித்தலைவர்!

NSW Opposition Leader Jodi McKay
NSW Opposition Leader Jodi McKay under crisis Source: AAP Image/Joel Carrett

2 min read

Published

Updated


Skip to article content

சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் தண்டனைபெற்ற தமிழ் அகதிக்கு bridging விசா வழங்குவது தொடர்பில் 'ஆதரவுக் கடிதம்' ஒன்றை வழங்கினார் என்ற சர்ச்சையில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் எதிர்க்கட்சித்தலைவர் Jodi McKay சிக்கியுள்ளார். 

ஆனால், அவர் மீது முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை Jodi McKay மறுத்துள்ளார். 

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 2012 இல் படகுமூலம் வந்த 20 வயது தமிழ் அகதியொருவர், மேற்கு சிட்னியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஒருவருடன் நண்பராக அறிமுகமாகி பின்னர் சிறுமியின் வீட்டுக்குச்சென்று பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. 

இந்தக்குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட நபருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  தண்டனைக்காலம் முடிவடைந்து வெளியில் வந்த அவர் சிட்னி விலவூட் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் 2018 இல் விலவூட் முகாமிலிருந்து bridging விசாவில் தன்னை விடுதலைசெய்யுமாறு கோரி குறித்த நபர் தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு Administrative Appeals Tribunal-இல் அதுகுறித்த மறுபரிசீலனை நடைபெற்றுவந்துள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட நபரின் bridging விசா விண்ணப்பத்திற்கு ஆதரவாக Jodi McKay கடிதம் வழங்கியிருக்கிறார் என்பதுதான் தற்போது வெடித்திருக்கும் சர்ச்சை. 

எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து மிகக்கடுமையான தொனியில் இந்த விவகாரம் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. "நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வராகும் இலக்கோடு பயணிக்கின்ற நபர் செய்கின்ற காரியம் இதுவல்ல" - என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். 

ஆனால், இந்தக்குற்றச்சாட்டினை மறுத்துள்ள Jodi McKay, தனது தேர்தல் தொகுதியை சேர்ந்த நபர் ஒருவர், சிட்னி விலவூட் தடுப்புமுகாமில் சந்தித்த நபருக்கான கடிதம் ஒன்றைக் கேட்டபோது அதை வழங்கி உதவியதாகவும், குறிப்பிட்ட குற்றப்பின்னணிகொண்ட நபரைத் தெரிந்துகொண்டு, அவரை விடுவிக்கவேண்டும் எந்த நோக்கத்துடனும் செயற்படவில்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும் தனது கடிதம் letter of support-ஆக எவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் Administrative Appeals Tribunal-இடம் தாம் விளக்கம் கோரியுள்ளதாகவும் Jodi McKay தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிட்னி Lindt Cafe பணயக்கைது சம்பவத்தில் ஈடுபட்ட Monis சார்பில், குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் - குடும்ப விவகாரமொன்றில் Monis-க்கு எதிரான நீதிமன்ற தடையொன்று நடைமுறையிலிருந்துபோதும்- அவருக்கு ஆதரவாக கடிதம் கொடுத்த காரணத்தினால் நியூ சவுத்வேல்ஸ் மாநில லேபர் தலைவராகவிருந்த John Robertson அந்த விவகாரம் பூதாகரமானபோது பதவியிழக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now