SKIP TO MAIN CONTENT

‘நாடுகடத்தப்படவிருந்த தமிழ் குடும்பத்திற்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு’

The Tamil family are being held on Christmas Island.
The Tamil family are being held on Christmas Island. Source: Twitter

1 min read

Published

Updated

By Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில்  முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணை நடத்திமுடிக்கப்படும் வரை தருணிகாவை நாடுகடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் மெல்பேர்ன் ஃபெடரல் நீதிமன்றம் இம்முடிவினை அறிவித்துள்ளது.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா மற்றும் நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் சுமார் ஒன்றரை வருடங்களாக மெல்பேர்னிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில், சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் தீர்ப்புவழங்குவதற்கு கால அவகாசம் எடுத்திருந்த பின்னணியில் இன்று தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இதன்படி பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி முழுமையான விசாரணை நடத்தப்படுவதற்கு எவ்வளவு நாட்களாகும் என்பது தெரியாதநிலையில் இத்தீர்ப்பினை பிரியா குடும்பத்திற்கு சாதகமான ஒன்றாகவே தாம் பார்ப்பதாக அவர்களது சட்டத்தரணியும் அகதிகள் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now