கொழும்பிலுள்ள மூன்று ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களை மேற்கொண்ட நபர்கள் என்று கருதப்படுவர்களின் தகவல்கள் அங்குள்ள வெளிநாட்டு செய்தி சேவைகளின் ஊடாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
இச்செய்திகளின்படி-கொழும்பிலுள்ள ஷங்கிரில்லா ஹோட்டலில் நேற்று முன்தினம் இருவர் தங்களுக்கு அறையொன்று தேவை என்று பதிவு செய்திருக்கிறார்கள். ஹோட்டல் பதிவுக்கான சொந்த முகவரியை கேட்டபோது கொழும்பு தெமட்டகொட பகுதி வீடொன்றின் முகவரியை கொடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து இவர்களுக்கு ஹோட்டலின் ஆறாவது தளத்திலுள்ள 616 ஆம் இலக்க அறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. நேற்றுக்காலை இவர்களில் ஒருவர் மூன்றாவது தளத்திலுள்ள உணவகத்துக்கு வந்து காலையுணவுக்காக காத்திருக்கும்போது திடீரென்று குண்டை வெடிக்கச்செய்திருக்கிறார். ஒரு குண்டுவெடிப்பு உணவக பகுதியில் வெடித்தபோது அடுத்த குண்டு இரண்டாவது நபரினால் ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இன்னொரு இடத்தில் வெடிக்கவைக்கப்பட்டிருக்கிறது. சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெருந்தொகையானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
குண்டுதாரிகள் என்று கருதப்பட்ட இரண்டு நபர்களும் தங்கியிருந்த அறைக்கு சென்ற பொலீஸார் தேடுதல் நடத்தியபோது அங்கிருந்து இரண்டு ஐபோன் சார்ஜர்களையும் துண்டுப்பிரசுரங்களையும் மீட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
மேற்படி சம்பவத்தில் குண்டுதாரிகள் இருவரும் உடல் சிதறி பலியாகியுள்ளார்கள். அவர்களின் சிதிலங்களை பொலீஸார் விசாரைணக்காக எடுத்துச்சென்றிருக்கிறார்கள்.
குண்டுவெடிப்பிற்காக 25 கிலோ எடையுள்ள ஸி4 வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அரச பகுப்பாய்வு திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி பொலீஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதுவேளை, சினமன் கிரான்ட் ஹோட்டலில் அறையெடுத்து தங்கிய நபர் தான் ஒரு வர்த்தகர் என்று பொய் கூறி பதிவுகளை மேற்கொண்டிருக்கிறார் என்பது இப்போது தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது. இவரது பெயர் முகமட் அஸாம் முகமட் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கொழும்பிலுள்ள உலக வரத்தக மையத்துக்கு அருகிலுள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்னொரு தாக்குதல் சம்பவம் பின்னர் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.