SKIP TO MAIN CONTENT

'கொழும்பு குண்டுவெடிப்பு- நியூசிலாந்து தாக்குதலுக்கான பதிலடி'-இலங்கை அரசு தகவல்!

SBS
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டுத்தாக்குதல்கள் நியூஸிலாந்து - கிறைஸ்ட்சேர்ச் மசூதிகளில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இருக்கலாம் என்று தாக்குதல்சம்பவங்கள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலங்கை உள்துறைப்பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய கடும்போக்குவாத குழு ஒன்றுடன் தொடர்புடைய இலங்கையின் National Thowheeth Jama'ath (NTJ) என்ற குழுவே இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் மிகப்பதற்றமான சூழ்நிலையில் இன்று கூடிய இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இதனைக் கூறினார்.

இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பது தொடர்பான புலனாய்வுத்தகவல்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு முன்னமே கிடைக்கப்பெற்றபோதும்கூட, அந்த தகவல்கள் குறிப்பிட்ட தரப்பினரிடையே மாத்திரம்தான் பரிமாறப்பட்டிருக்கிறது என்றும் தனக்கோ பிரதமருக்கோ அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பேசிய எதிர்க்கட்சித்தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச - தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே விடுக்கப்பட்ட எச்சிரிக்கைகள் தொடர்பில் அரசு அசமந்தமாக நடந்துகொண்டமை குறித்து கடுங்கண்டனம் தெரிவித்தார்.

தனது பொறுப்பில் அரசாங்கமிருந்திருந்தால் இவ்வாறானதொரு அனர்த்தம் நடந்திருக்காது என்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கத்தெரியாவிடின் தற்போதைய அரசை பதவியிறங்குமாறும் மகிந்த கேட்டுள்ளார்.

நாட்டில் பெரும்பதற்றம் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில் குறிப்பிட்டதொரு இனத்தையோ மதத்தினரையோ நோக்கி விரல் நீட்டாமல், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசு துணியவேண்டும் - என்று அவர் மேலும் கூறினார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now