SKIP TO MAIN CONTENT

கொழும்பு தாக்குதல்கள்: அதிர்ச்சிதரும் உண்மைகளை ஒப்புக்கொள்ளும் இலங்கை அரசு!

Investigators in Negombo, Sri Lanka, on Monday, April 22, 2019, at the scene of a suicide bombing at St. Sebastian Church.
Investigators in Negombo, at the scene of a suicide bombing at St. Sebastian Church. Source: The New York Times

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக அமெரிக்க - இந்திய புலனாய்வுத்தரப்புக்கள் இலங்கை புலனாய்வுப்பிரிவினரை ஏற்கனவே எச்சரித்திருந்தன என்று இலங்கை அரசின் பேச்சாளர் ராஜித்த சேனாரட்ண நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம் நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அதிர்ச்சிகரமான பல உண்மைகளையும் ராஜித்த சேனாரட்ண பகிர்ந்துகொண்டிருந்தார்.

அங்கு அவர் மேலும் கூறும்போது - இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களினால் தாக்குதல் இடம்பெறலாம் என்று கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரித்திருந்தன. இந்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் முதலாவது உள்ளக - இரகசிய - அறிவிப்பினை ஏப்ரல் ஒன்பதாம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியிருந்தார். இந்த அறிவிப்பில், தாக்குதலுக்கு உத்தேசிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட இடங்கள், அதனுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று சந்தேகிக்கப்படும் பெயர் விவரங்கள் ஆகியவை உட்பட சகல தகவல்களும் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், பொலீஸ் மா அதிபர் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பிரதிப்பொலீஸ் மா அதிபர் பிரயலால் தஸநாயக்க, அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்பு பிரிவு மற்றும் முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு பிரிவினர் அனைவருக்கும் விசேட அறிவிப்பொன்றின் ஊடாக மேற்படி தகவலை வழங்கியிருந்தார். ஆனால், பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கோ ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கோ பிரியலால் திஸநாயக்க இந்த தகவலைக்கூறவில்லை. பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு இந்த எச்சரிக்கை பற்றி அறியப்படுத்தாமையானது மிகப்பெரிய தவறாகும்.

தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் ஒரு பொறுப்புள்ள தலைவராக - ஜனாதிபதி நாட்டில் இல்லாத சமயம் - தேசிய பாதுகாப்பு சபையைக்கூட்டி அவசர ஆலோசனைகளை நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிசெய்தபோதும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துரையாடலுக்கு வரவில்லை. பாதுகாப்பு அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்று இதுபற்றி பேசுவதற்கு கேட்டபோதும் சுமார் அரைமணி நேரம் காத்திருந்தபோதும் தமக்கு உயர்மட்ட உத்தரவுகள் கிடைக்கப்பெறவில்லை என்று சம்பந்தப்பட்ட தரப்பினர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு மறுத்துவிட்டனர்.

கடந்த ஒக்டோர் மாதம் முதல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ உள்துறை பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவோ தேசிய பாதுகாப்பு சபைக்கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரி அண்மையில் வெளிநாட்டுக்கு பயணம் செய்ததுகூட, தனிப்பட்ட பயணமா, உத்தியோகபூர்வ பயணமா என்பது பற்றி அமைச்சரவைக்கோ பிரதமருக்கோ அறிவிக்கப்படவில்லை. தான் நாட்டில் இல்லாதசமயம், பிரதி பாதுகாப்பு அமைச்சர் யார், தனது பொறுப்புக்களை கவனித்துக்கொள்வது யார் என்று ஜனாதிபதி எந்தவிதமான உத்தியோகபூர்வ ஏற்பாடுகளும்கூட மேற்கொண்டிருக்கவில்லை. எச்சரிக்கைகள் கிடைக்கப்பெற்றும் துரதிஷ்டவசமாக இத்தாக்குதல்களை தடுக்க முடியவில்லை. இதற்கு நாம்தான் பொறுப்பு. அதற்காக நாம் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் - என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now