கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஷங்கிரிலாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக்குண்டுதாரியின் மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் சகோதரன் ஆகியோரும் பலியாகியுள்ளார்கள் என்று பொலீஸார் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஷங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து தெமட்டகொடவில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்தபோது அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பிலேயே மேற்குறிப்பிட்ட குண்டுதாரியின் குடும்பத்தினர் பலியாகியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கிரிலா தற்கொலைக்குண்டுதாரி என்று கருதப்படும் நபர் வெல்லம்பிட்டியாவில் தொழில்நிறுவனம் நடத்திவந்தவர் என்றும் அங்கு சுமார் நூறுபேர்வரையில் பணிபுரிந்தார்கள் என்றும் அவர்களில் ஒன்பது பேரை பொலீஸார் தற்போது கைது செய்து தடுப்புக்காவல் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் நீதிமன்றத்தில் இந்த தகவல்களை பொலீஸார் கூறியதுடன் சந்தேகநபர்களாக தாங்கள் கைது செய்து வைத்திருப்பவர்களை தொடர்ந்து விசாரிப்பதற்கு நீதிமன்ற அனுமதியை கோரியதையடுத்து தடுப்புக்காவலுக்கான திகதியை எதிர்வரும் மே ஆறாம் திகதிவரை நீடித்து அனுமதி வழங்கிய நீதிபதி, குறிப்பிட்ட ஒன்பது பேரினது தொலைபேசி கலந்துரையாடல்களைப்பெற்றுக்கொள்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
