ஆஸ்திரேலியாவில் உள்ள Fast-Food உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நினைத்துப்பார்க்க முடியாதளவு அச்சுறுத்தல்களை வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்நோக்கிவருவதாகவும் சில சந்தர்ப்பங்களில் கொலை அச்சுறுத்தல்கள்கூட விடுக்ககப்பட்டுள்ளன என்றும் நாடளாவிய ரீதியில் இந்த உணவகங்களில் பணிபுரிபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சுமார் ஆயிரம் பணியாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 87 சதவீதமானவர்கள் தாங்கள் வாடிக்கையாளர்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறியுள்ளனர்.
கடுங்கோபமடையும் வாடிக்கையாளர்கள் உடல் ரீதியான தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தேனீர், கோப்பி போன்ற சுடுபானங்கள், burger உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மற்றும் சிகரெட்களை பணியாளர்களின் மீது எறிவதாகவும் பாலியல் ரீதியான வசைச்சொற்களை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்வதாகவும் இந்த பணியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேற்படி உணவகங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் இவ்வாறான சம்பவங்களுக்கு அதிகம் முகங்கொடுப்பதாகவும் 17 வயதுக்கு குறைந்தவர்கள்கூட இப்படியான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
உணவக பணியாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கம் மேற்கொண்ட இந்த கருத்துக்கணிப்பில் பெற்றுக்கொள்ளப்பட முடிவுகளின் பிரகாரம், பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் வாடிக்கையாளர்களை கோரும் விளம்பரங்கள் பார்வைக்கு வைக்கபப்படவுள்ளன.
Share
