SKIP TO MAIN CONTENT

காணாமல்போன நடராஜர் 36 வருடங்களின் பின் தெற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!

ABC News: Taryn Southcombe
Source: ABC News: Taryn Southcombe

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்திலுள்ள கோவிலில் காணாமல்போன பெறுமதிவாய்ந்த நடராஜர் சிலை, தெற்கு ஆஸ்திரேலிய கலைப்பொருள் காட்சியகத்தில் (Art Gallery of South Australia) உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது.

அறுநூறு வருடங்கள் பழமை வாய்ந்த சுமார் நூறு கிலோ எடையுள்ள இந்த நடனமாடும் நடராஜர் சிலை 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெல்லையிலுள்ள கோவிலில் திருட்டுப்போயிருந்து. கோயில் கதவை உடைத்து புகுந்த திருடர்கள் இந்த சிலையை திருடிச்சென்றிருந்தார்கள்.

இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தமிழக பொலீஸார் குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தெரிவித்து 1984 இல் வழக்கு விசாரணைகளை நிறைவு செய்திருந்தனர்.

இந்தப்பின்னணியில் கலைநுணுக்கத்துடன்கூடிய பெறுமதிவாய்ந்த இந்த வெண்கல சிலையை கடந்த 2001 ஆம் ஆண்டு தெற்கு ஆஸ்திரேலிய கலைப்பொருள் காட்சியகம் நாலு லட்சத்து 35 ஆயிரத்து 747 டொலர்களுக்கு லண்டனிலிருந்து கொள்முதல் செய்திருந்தது.

கலைப்பொருள் காட்சியகத்துக்கு பொருட்களை கொள்முதல் செய்யும் நடைமுறைகளின் பிரகாரம் இந்த சிலை திருடப்பட்ட பொருள் அல்ல என்று தெற்கு ஆஸ்திரேலிய கலைப்பொருள் காட்சியகம் சிலையை விற்பனை செய்த தரப்பிடம் எழுத்து மூலம் உத்தரவாதம் வாங்கியிருந்ததுடன் இந்த சிலை ஐரோப்பாவிலிருந்து 1970 இல் கொள்முதல் செய்யப்பட்டதாக லண்டன் விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இதையடுத்து சிலையை வாங்கிவந்த தெற்கு ஆஸ்திரேலிய கலைப்பொருள் காட்சியகத்தினர் அடிலெய்ட்டிலுள்ள தமது காட்சியகத்தில் இச்சிலையை பார்வைக்கு வைத்திருந்தார்கள்.

அண்மையில் இந்த சிலைதிருட்டுப்போனது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கத்தொடங்கிய இந்திய பொலீஸார், குறிப்பிட்ட சிலை ஆஸ்திரேலியாவில் உள்ளதை கண்டறிந்துள்ளனர்.

பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்திலிருந்த கோவிலில் இந்த சிலை எழுந்தருளியிருந்தமைக்கான புகைப்பட ஆதாரங்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு வந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து , இந்திய - ஆஸ்திரேலிய அரசுகளின் தலையீட்டுடன் குறிப்பிட்ட நடராஜர் சிலையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரிகள் தற்போது மேற்கொண்டுவருகிறார்கள் எனவும்  இதனை தெற்கு ஆஸ்திரேலிய கலைப்பொருட்கள் காட்சியகம் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் ABC செய்தி வெளியிட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now