காணாமல்போன நடராஜர் சிலை: இந்தியாவிடம் ஒப்படைத்தது ஆஸ்திரேலியா!

Dancing Shiva

Source: twitter/HCICanberra

முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்திலுள்ள கோவிலில் காணாமல்போன நடராஜர் சிலை, தெற்கு ஆஸ்திரேலிய கலைப்பொருள் காட்சியகத்தில் (Art Gallery of South Australia) இருந்தமை உறுதிசெய்யப்பட்டதையடுத்து குறித்த சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அறுநூறு வருடங்கள் பழமை வாய்ந்த சுமார் நூறு கிலோ எடையுள்ள பெறுமதிமிக்க இந்த நடனமாடும் நடராஜர் சிலை 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெல்லையிலுள்ள கோவிலில் திருட்டுப்போயிருந்து. கோயில் கதவை உடைத்து புகுந்த திருடர்கள் இந்த சிலையை திருடிச்சென்றிருந்தார்கள்.

இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தமிழக பொலீஸார் குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தெரிவித்து 1984 இல் வழக்கு விசாரணைகளை நிறைவு செய்திருந்தனர்.

இந்தப்பின்னணியில் கலைநுணுக்கத்துடன்கூடிய பெறுமதிவாய்ந்த இந்த வெண்கல சிலையை கடந்த 2001 ஆம் ஆண்டு தெற்கு ஆஸ்திரேலிய கலைப்பொருள் காட்சியகம் நாலு லட்சத்து 35 ஆயிரத்து 747 டொலர்களுக்கு லண்டனிலிருந்து கொள்முதல் செய்திருந்தது.

கலைப்பொருள் காட்சியகத்துக்கு பொருட்களை கொள்முதல் செய்யும் நடைமுறைகளின் பிரகாரம் இந்த சிலை திருடப்பட்ட பொருள் அல்ல என்று தெற்கு ஆஸ்திரேலிய கலைப்பொருள் காட்சியகம் சிலையை விற்பனை செய்த தரப்பிடம் எழுத்து மூலம் உத்தரவாதம் வாங்கியிருந்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த சிலை ஐரோப்பாவிலிருந்து 1970 இல் கொள்முதல் செய்யப்பட்டதாக லண்டன் விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இதையடுத்து சிலையை வாங்கிவந்த தெற்கு ஆஸ்திரேலிய கலைப்பொருள் காட்சியகத்தினர் அடிலெய்ட்டிலுள்ள தமது காட்சியகத்தில் இச்சிலையை பார்வைக்கு வைத்திருந்தார்கள்.

இந்த சிலைதிருட்டுப்போனது தொடர்பான வழக்கை கடந்த வருடம் மீண்டும் விசாரிக்கத்தொடங்கிய இந்திய பொலீஸார், குறிப்பிட்ட சிலை ஆஸ்திரேலியாவில் உள்ளதை கண்டறிந்திருந்தனர்.

பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்திலிருந்த கோவிலில் இந்த சிலை எழுந்தருளியிருந்தமைக்கான புகைப்பட ஆதாரங்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு வந்து உறுதிப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து , இந்திய - ஆஸ்திரேலிய அரசுகளின் தலையீட்டுடன் குறிப்பிட்ட நடராஜர் சிலையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகள் கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அண்மையில் குறித்த சிலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


2 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now