இந்திய தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் சிலை ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் அகற்றப்பட்டுள்ளது.
கானா நாட்டின் பெருமைமிகு பல்கலைக்கழகம் என்று பார்க்கப்படும் கானா பல்கலைக்கழகத்தில் (University of Ghana) காந்தியின் சிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
காந்தி சிலை இந்த பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சிலை அகற்றப்படவேண்டும் என்று கோரி இந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் இணையத்தளம் வழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவந்த காந்தி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடும்போது, ஆப்ரிக்க மக்களைவிட இந்தியர்கள் "infinitely superior" – முடிவற்றவகையில் உயர்ந்தவர்கள் என்று எழுதியுள்ளார் என்று அந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும் காந்தி அவர்கள் ஒரு “racist” (நிறவெறியர்) என்றும் இந்த சிலை அகற்றப்பட போராடியவர்கள் கூறிவந்தனர்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையினத்தவர் இந்தியர்களையும் கறுப்பின மக்களையும் ஒரே மாதிரி இழிவாக நடத்தியபோது, அதை எதிர்த்துப் இந்திய மக்களுக்காகப் போராடிய காந்தி அவர்கள் இந்திய மக்கள் கறுப்பின மக்களைவிட நாகரீகமானவர்கள் என்றும், எனவே இந்தியர்களும் கறுப்பின மாக்களும் சமமல்ல (“their civilised habits … would be degraded to the habits of aboriginal natives”) என்றும் அவர் எழுதினார் என்றும் ஆப்ரிக்க வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
காந்தியின் சிலை தமது பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்று இந்த பல்கலைக் கழகத்தின் Institute of African Studies பிரிவின் Language, Literature and Drama துறையின் தலைவர் Obadele Kambon கூறுகிறார்.
ஆனால் காந்தி அவர்களின் எழுத்தை அவரது காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்றும் அவரின் அறியாமையும், முற்சார்பு எண்ணங்களும் அவரை அப்படி எழுத வைத்திருக்கலாம் என்றும், ஆனால் அவரின் அகிம்சைப் போராட்டம் ஆப்ரிக்க நாடுகளின் பல்வேறு போராட்டங்களுக்கு உத்வேகம் தந்தது என்றும் காந்தி சிலை நிறுவ ஆதரவு தந்தவர்கள் கூறுகின்றனர்.
மகாத்மா காந்தி அவர்களின் சிலை கடந்த செவ்வாய்கிழமை அகற்றப்பட்டது. மகாத்மா காந்தி அவர்களின் சிலை அகற்றப்படும் முடிவு அரசின் முடிவல்ல என்றும், அது பல்கலைக்கழகத்தின் முடிவு என்றும் கானா நாட்டின் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
(படத்தில் இருப்பது மாதிரி சிலை)
Share
