மெல்பேர்னில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் செயற்பாட்டினை ஒவ்வொரு வாரமும் மேற்கொள்வதற்குப் பதிலாக இரு வாரங்களுக்கு ஒருதடவை மேற்கொள்ளலாம் என, விக்டோரிய மாநில அரச அமைப்பு ஒன்று பரிந்துரைத்துள்ளது.
வாராவாரம் குப்பை சேகரிக்கப்படுவதால் மக்கள் தமது வீடுகளில் அதிகளவான குப்பை கூழங்களைச் சேர்க்கிறார்கள் எனவும், இதனை இருவாரங்களுக்கு ஒருதடவை என மாற்றும்போது மக்களின் போக்கில் மாற்றம் ஏற்படுவதுடன், landfill-குப்பை புதைக்கப்படும் இடங்களை வந்தடையும் கழிவுகளின் அளவும் குறைக்கப்படும் என விக்டோரிய மாநில அரசின் Metropolitan Waste and Resource Recovery Group பரிந்துரைத்திருந்தது.
அத்துடன் குப்பை சேகரிக்கப்படும் வாளிகளின் அளவையும் சிறிதாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சுமார் 878,000 தொன் கழிவுகள் குப்பை புதைக்கப்படும் இடங்களை வந்தடையும் நிலையில், இதைத் தடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என Metropolitan Waste and Resource Recovery Group வலியுறுத்தியுள்ளது.
எனினும் இப்பரிந்துரையை அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் மாநில அரசு எவ்வித முடிவுகளையும் அறிவிக்காதநிலையில், இப்பரிந்துரைக்கு மெல்பேர்ன் வாழ் மக்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
