தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (PTI), 120 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆளும் நவாஸ் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிபிபி 18 இடங்களில் வெற்றி பெற்று 22 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது எனினும், தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவை வெளியிடவில்லை. இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இறுதி முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. எனினும், PTI கட்சி வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அடுத்த பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 342 இடங்கள் உள்ளன. இதில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் 137 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்க முடியும். மீதம் உள்ள 60 இடங்கள் பெண்களுக்கும், 10 இடங்கள் மத சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் நியமிக்கப் படுவார்கள்.
இறுதி முடிவு, இன்னமும் 24 மணி நேரத்திற்குள் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
