மெல்பேர்னில் சிக்னல் விளக்குகளில் தரிக்கும் வாகனங்களின் ஓட்டுனர்கள் தொலைபேசி பயன்படுத்துவதை கண்காணிப்பதற்கு பொலீஸார் மாறுவேடத்தில் வாகனங்களின் கண்ணாடியை துப்பரவு செய்பவர்களாக களத்தில் குதித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன ஓட்டுனர்கள் கைத்தொலைபேசியை உபயோகிப்பது பெருகிவரும்நிலையில், அதனை கடுமையான குற்றமாக அறிவித்து, அந்தக்குற்றத்துக்குரிய அபராத தொகையை அதிகரித்துள்ளபோதும் வாகன ஓட்டுனர்களின் சட்டவிரோதமான தொலைபேசி பாவனை குறையவில்லை என்று பொலீஸார் தெரிவித்துவருகிறார்கள். இதன்காரணமாக, நாட்டின் பல பாகங்களிலும் பொலீஸார் அதிரடியாக பல சோதனைகளை மேற்கொண்டு வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசி பயன்படுத்துகின்றவர்களுக்கு கடுமையான அபராதங்களை விதித்துவருகின்றனர்.
இந்த சோதனை வழிமுறைகளின் புதிய வடிவமாக மெல்பேர்னில் வாகனங்களின் கண்ணாடியை துப்பரவு செய்பவர்கள் என்ற போர்வையில் பொலீஸார் வாகனங்களுக்கு மிக அருகில் வந்து மாறுவேடத்தில் சோதனை செய்யும் பணியை கையிலெடுத்திருக்கிறார்கள் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் வைரலாக இதுகுறித்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில் குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸார் Nunawading பகுதியில் Maroondah Highway - Springvale வீதியில் இந்த இரகசிய சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்முடிவில் சுமார் 35 பேருக்கு அபராத கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கன்பராவைத் தவிர ஆஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களில் வீதிகளில் எழுந்தமானமாக வாகனங்களின் கண்ணாடிகளை துப்பரவு செய்வதற்கு சிக்னலில் பணிபுரிவது சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்படுகிறது.
