மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்லுக்கு எதிராக சுமத்தப்பட்ட போலியான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தீர்ப்பினை Fairfax Media, பிரசுரித்த விதம் கெய்ல் மேலதிக நட்டஈட்டுக்கு தகுதியானவர் என்பதை காண்பிக்கிறது என மேற்படி தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனு NSW நீதிமன்றத்தில் விசாரைணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிறிஸ் கெய்ல் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சிக்கு ஆஸ்திரேலிய வந்திருந்தபோது உடைமாற்றும் அறையில்வைத்து பெண் உத்தியோகத்தர் (massage therapist) ஒருவருக்கு முன்பாக ஆடையின்றி நின்றார் என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை Fairfax Media குழுவின் கீழான ஆஸ்திரேலிய ஊடகங்கள் Sydney Morning Herald, The Age, the Canberra Times ஆகியவை பிரசுரித்திருந்தன.
பொய் செய்தியொன்றை இவ்வாறு பிரசுரித்தன் மூலம் தனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கிறிஸ் கெய்ல் Fairfax Media ஊடகத்துக்கு எதிராக நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2017 ஆண்டு அக்டோர் வழங்கப்பட்டபோது கிறிஸ் கெய்ல் குற்றம் செய்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் போலிக்குற்றச்சாட்டினை பிரசுரம் செய்த Fairfax Media குழுமம் கெய்லுக்கு மூன்று லட்சம் டொலர்கள் நட்டஈடு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக Fairfax Media குழுமம் மேன்முறையீடு செய்திருந்தது.
விசாரணையின் எந்த அமர்வுக்கும் கெய்ல் நீதிமன்றத்துக்கு வருகை தரவில்லை என்றும் தீர்ப்புக்கு ஆதாரமாக விளங்கிய ஜூரிகளை மாற்றுமாறு தாம் முன்வைத்த கோரிக்கை நீதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் Fairfax Media குழுமம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பை தெரிவித்த கெய்லின் வழக்கறிஞர் - வழக்கின் பிரதான சாட்சியம் முன்வைத்த சாட்சி பொய்யானது என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என்றும் இப்படிப்பட்டதொரு வழக்கில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றுக்கு சமூகமளிப்பது அவரது மனதை மேலும் புண்படுத்துவதாகவே அமையும் என்றும் இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்தநாள் Fairfax Media குழும ஊடகங்கள் பிரசுரித்த முறையானது கெய்ல் மேலதிக நட்டஈட்டுக்கு தகுதியானவர் என்பதையே காண்பிக்கிறது என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
Share
