நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் மசூதிகளில் தாக்குதல் நடத்தி 51 பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ள Brenton Tarrant சிறையிலிருந்து எழுதிய ஆறு பக்க கடிதத்தை 4chan என்ற இணையத்தளம் பிரசுரித்துள்ளமை பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
நிறவெறிபிடித்த கொலையாளி சிறையிலிருந்து தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டமை கண்டனத்துக்கு உரியது என பல்வேறுதரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Brenton Tarrant மேற்கொண்ட தாக்குதல் பாணியில் அமெரிக்கா முதல் நோர்வே வரை சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த கடிதம் வெளிவந்துள்ளமையானது பலத்த அதிருப்தியை பல மட்டங்களில் ஏற்படுத்தியிருக்கிறது.
பென்சிலால் எழுதப்பட்ட இந்த ஆறு பக்க கடிதம் ரஷ்யாவிலுள்ள அலன் என்பவருக்கு முகவரியிடப்பட்டு எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடிதம் வெளியானதை ஒப்புக்கொண்டுள்ள நியூசிலாந்து சிறை நிர்வாகம், அதன் பாரதூரத்தன்மையை உணர்ந்துகொள்வதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறு இடம்பெறாது என்று உறுதியளிப்பதாகவும் கூறியிருக்கிறது.
