கணவனால் உடல் - உள ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் வருடமொன்றுக்கு பத்து நாட்களுக்கு சம்பளத்துடன் விடுப்பெடுத்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்றும் அதற்கான சட்ட வரைவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரவேண்டும் என்றும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்களில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் மேற்படி துயர் நிறைந்த வாழ்விலிருந்து வெளியேறி தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திற்கொள்வதற்கு துணிவு மாத்திரம் போதாது, நேரமும் பணமும்கூட தேவையாக உள்ளது என்றும் தொழிற் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளை தடுப்பது தொடர்பாக அடிலெய்ட்டில் நடைபெறுகின்ற முக்கியமான சந்திப்பிலேயே இந்தக்கோரிக்கை உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவுள்ளது.இந்த சந்திப்பில் நாடெங்கிலுமிருந்து சுமார் 80 பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் யோசனைகளை முன்வைக்கவுள்ளனர்.
வருமானமா பாதுகாப்பா முக்கியம் என்ற கொடூரமான தெரிவை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் மீது வேலைத்தளம் திணிக்கக்கூடாது என்றும் அதற்குரிய தீர்வாக இந்த விடுப்பு யோசனையை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறையின் பிரகாரம் குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் வருடமொன்றுக்கு ஐந்து நாட்கள் சம்பளமற்ற விடுப்பெடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
