மெல்பேர்ன் கோப்பை எனப்படுகின்ற ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய விளையாட்டுத்திருவிழா நடைபெற்ற பிளமிங்டன் குதிரைபந்தைய திடலின் வாசலில் அகதிகளின் உரிமைக்காக கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய அகதிகள் நல அமைப்பு பிரதிநிதிகள் ஆறுபேர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நவுறுவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்யக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஆவர்.
The Whistleblowers, Activist and Citizens Alliance என்ற அமைப்பை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் பேசிய பெண்மணி ஒருவர் தங்களது போராட்டம் தொடர்பாக கூறும்போது "தடுப்புமுகாம்களில் ஆஸ்திரேலிய அரசு தடுத்துவைத்துள்ள அகதிகள் அனைவரும் அரசியல் கைதிகள். அவர்களை விடுதலை செய்யும்வரைக்கும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சகல பொது நிகழ்வுகளிலும் எங்களது போராட்டங்களை நடத்திக்கொண்டேயிருப்போம். நீதிக்கு புறம்பான வகையில் பொதுமக்களை ஆஸ்திரேலிய அரசு கைதிகள்போல தடுத்துவைத்துக்கொண்டிருக்கும்போது மெல்பேர்ன் இப்படியான தீவிர வலதுசாரிக்கொள்கைகளின் வழிவந்த களியாட்ட நிகழ்வுகளை நடத்தக்கூடாது. குதிரைகளும்கூட இறந்துகொண்டிருக்கின்றன" - என்று அவர் தெரிவித்துள்ளார்.
