ஆஸ்திரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவிற்கு, செனற் அவை அங்கீகாரம் வழங்கக்கூடாதென ஆஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் கூறியுள்ளது.
புலம்பெயர் பின்னணிகொண்டவர்களுக்கு இப்புதிய சட்டம் பாதகமானது என்பதால், அரசின் சட்டமுன்வடிவில், மாற்றங்களைச் செய்வது தொடர்பில், ஆஸ்திரேலிய செனட்டர்கள் ஆலோசிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் ஊக்குவித்துள்ளது.
குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவினை ஆராயும் செனட் குழுவிடம் தனது கருத்துக்களையும் ஆஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் சமர்ப்பித்துள்ளது.
Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் எனும் தற்போதைய நிபந்தனையை மாற்றி, ஒருவர் வதிவிட உரிமையுடன் 4 ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்பதுடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல், ஆஸ்திரேலிய விழுமியங்களை ஏற்றல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளன.
இந்தப்பின்னணியில் குடியுரிமைச் சட்டமுன்வடிவில் அரசினால் முன்மொழியப்பட்டுள்ள ஆங்கில அறிவுமட்டத்தை நிரூபிப்பதற்கான பரீட்சையில், அரசு எதிர்பார்க்கும் தகமையை, ஆஸ்திரேலியாவிலேயே பிறந்த பலராலேயே பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம் என, ஆஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேநேரம் நிரந்தரவதிவிட உரிமை கிடைத்தும் குடியுரிமைக்காக நீண்டநாட்கள் காத்திருக்க வேண்டுமென்பது, ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக குடிபெயர்ந்தவர்களுக்கு பாரிய சிக்கல்களை உருவாக்கும் எனவும் இக்கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது.
