SKIP TO MAIN CONTENT

குடியுரிமை விண்ணப்ப பரிசீலனையை விரைவுபடுத்த நடவடிக்கை!

Australian citizenship
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தேங்கியிருப்பதாக தெரிவிக்கப்படும்நிலையில், இவற்றைப் பரசீலிப்பதற்கென, மேலதிக பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

அடுத்த 6 மாதங்களுக்குள் மேலதிகமாக 150 பேர் குடியுரிமை விண்ணப்ப பரிசீலனையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த ஒருவர்  அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக குற்றம்சாட்டப்படும் பின்னணியில், தற்போதைய நிலவரப்படி குடியுரிமை விண்ணப்பங்கள் 14 தொடக்கம் 17 மாத காலப்பகுதிக்குள் பரிசீலனைக்குட்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சு,  குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதில் நிலவும் தாமதத்திற்கு கீழ்க்காணும் 3 காரணங்களை பட்டியலிட்டுள்ளது.

•    2010 தொடக்கம் 2018 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மும்மடங்காகியுள்ளது.

•    முன்னெப்போதும் இல்லாதவகையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதால், விண்ணப்பங்கள் அனைத்தும்  கடுமையான பாதுகாப்பு விதிகளின் கீழ் பரிசீலிக்கப்படும் அதேநேரம் விண்ணப்பதாரியின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.

•    லேபர் ஆட்சிக்காலத்தில் படகுமூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய சுமார் 50 ஆயிரம் பேரில், நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பலர் தற்போது குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதால், அவர்களது விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு கூடுதல் காலமும் ஆளணி வளங்களும் தேவைப்படுகிறது. இது ஏனையவர்களின் விண்ணப்பங்களைப் பாதிக்கிறது.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் குடியுரிமை விண்ணப்ப பரிசீலனை தாமதமாகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமெனக் கோரியுள்ள உள்துறை அமைச்சு,  இயன்றவரை இச்செயற்பாட்டில் நிலவும் தாமதத்தை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், இதன் ஒரு அங்கமாகவே மேலதிக பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now