SKIP TO MAIN CONTENT

கைவிரித்த காப்புறுதி நிறுவனங்கள்! இலங்கை குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள்!!

Travel insurance
Source: AAP

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

இலங்கைக்கு பயணம் செய்வதற்கு விமானச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டு, அண்மையில் அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களை அடுத்து பயணத்தை ரத்துச்செய்துவிட்டு பயணச்சீட்டுக்கான காப்புறுதியை பெற்றுக்கொள்வதற்காக தங்களது காப்புறுதி நிறுவனங்களை நாடியவர்களுக்கு அந்நிறுவனங்கள் கையை விரித்துள்ளன.

அதேவேளை குறிப்பிட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றபோது இலங்கையிலிருந்த ஆஸ்திரேலியர்களும் காப்புறுதி நிறுவனங்களால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வெளிநாடு செல்பவர்களுக்கான பயணக்காப்புறுதிகளில் அநேகமானவை வெளிநாட்டு அமைச்சின் அறிவிப்புக்களின் பிரகாரம் தங்களது கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடிப்பவை. இதன்பிரகாரம், அண்மையில் இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றவுடன், அடுத்தநாளே ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதன்படி இலங்கையில் தீவிரவாதிகளின் தாக்குதல் இடம்பெற்றுள்ள காரணத்தினாலும் - இனிமேலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், அங்கு செல்ல விரும்பும் ஆஸ்திரேலியர்கள் தங்களது "பயணங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு" ("reconsider your need to travel") அறிவித்திருந்தது.இதில்தான் பயணக்காப்புறுதி நிறுவனங்களின் தந்திரோபாயமிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அதாவது, வெளிவிவகார அமைச்சு, பயணங்களை மீள்பரிசீலனை செய்துகொள்ளுமாறுதான் அறிவித்திருக்கிறதே தவிர, பயணங்களை ரத்து செய்யுமாறு ("do not travel") அறிவிக்கவில்லை. பயணக்காப்புறுதிகள் விமானச்சீட்டுக்கான தொகையை முழுமையாக திருப்பி செலுத்துவதானால், வெளிவிவகார அமைச்சு, குறிப்பிட்ட நாட்டுக்கு முற்றாக பயணத்தடையை அறிவிப்பு விடுத்ததாக இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், காப்புறுதி நிறுவனம் எந்த மீளளிப்பும் செய்துகொள்ளாது.

இதேபோல, குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது இலங்கையிலிருந்த ஆஸ்திரேலியர்களுக்கும் இந்தக்காப்புறுதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கிருந்தவாறு கடைசிநேரத்தில், நாடு திரும்புவதற்காக விமானச்சீட்டில் திகதி மாற்றம் செய்யவேண்டுமாயின் அதற்கு உகந்த பயணக்காப்புறுதியை ஆரம்பத்திலேயே பதிவு செய்திருக்கவேண்டும். சாதாரணமாக செய்துகொள்கின்ற பயணக்காப்புறுதி பதிவு, பயங்கரவாத நடவடிக்கைகளால் முன்கூட்டியே நாடுதிரும்புவதற்கு ஏற்படும் செலவினை ஒருபோதும் வழங்குவதில்லை. ஆனால், குறிப்பிட்ட நாட்டில் ஏற்படுகின்ற பாதிப்பினால் தேவைப்படுகின்ற மருத்துவச்செலவினை அநேக காப்புறுதி நிறுவனங்கள் கொடுப்பது வழக்கம்.

இந்தவகையில், அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கள் அந்நாட்டுக்கு போகவிருந்த ஆஸ்திரேலியர்கள், ஏற்கனவே அங்கு போயிருந்தவர்கள் என்று பலர் மீது காப்புறுதி ரீதியாக பலத்த நிதித்தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now