குயின்ஸ்லாந்து கோல்ட் கோஸ்ட்டிலிருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு சென்றிருந்த சமயம் கர்ப்பிணிப்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது கணவர் மற்றும் அவரது காதலி என்று கூறப்படுபவர் இருவருக்கும் இந்தியாவின் பஞ்சாப் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருக்கிறது.
எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகும்படி பஞ்சாப் பொலீஸார் கூறியிருக்கிறார்கள்.
இந்தக்கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் நால்வர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கடத்தல் மற்றும் படுகொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் வழக்கின் ஏனைய சந்தேக நபர்களான - தற்போது ஆஸ்திரேலியாவிலுள்ள இருவருக்கும் - நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருக்கிறது என்றும் இவர்கள் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகாத பட்சத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலீஸார் தெரிவித்துள்ளனார்.
குயின்ஸ்லாந்து கோல்ட்கோஸ்ட் பிரதேசத்தில் தாதியாக பணிபுரிந்த Ravneet Kaur என்ற நான்கு மாத கர்ப்பிணிப்பெண் அவரது சொந்த ஊருக்கு சென்றபோது - கடந்த மார்ச் மாதம் - அவர் கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரது கொலையில் அவரது கணவருக்கும் அவரது காதலிக்கும் தொடர்புண்டு என்று கூறப்பட்டது.அத்துடன், இந்தியாவிலும் நால்வர் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று கூறப்பட்டது.
படுகொலையான பெண் பத்து நாட்களின் பின்னர் ஆறொன்றிலிந்து சடலமாக மீட்கப்பட்டதையடுத்து பஞ்சாப் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் தாக்கல்செய்யப்படட வழக்கின் பிரகாரம் ஆஸ்திரேலியாவிலுள்ள கணவரும் அவரது காதலி என்று கூறப்படுகிறவரும் இந்தியாவுக்கு தற்போது அழைக்கப்பட்டுள்ளனர்.
