புகலிடக்கோரிக்கையாளர்கள் என நம்பப்படும் இருபதுக்கும் மேற்பட்டவர்களுடன் குயின்ஸ்லாந்தின் வடக்கு Cape Kimberley பகுதியில் கரையேறிய மீன்பிடி படகொன்றிலிருந்து வெளியேறி காடுகளுக்குள் ஒளிந்திருப்பவர்களை தேடி ஆஸ்திரேலிய கரையோர காவல் படையினர் மோப்பநாய்கள் சகிதம் சல்லடைபோட்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.
நேற்று காலை எட்டு மணியளவில் குயின்ஸ்லாந்தின் வடக்கில் Cape Kimberley பகுதியில் தரைதட்டிய மீன்பிடி படகிலிருந்தவர்கள் உடனடியாகவே வெளியில் குதித்து, அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடிச்சென்று ஒளிந்திருக்கிறார்கள்.
இவர்களை கண்ட உள்ளுர்வாசிகள் பொலீஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு விரைந்து சென்ற பொலீஸார் காடுகளுக்குள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பின்னர் இந்த நடவடிக்கையில் கரையோர காவல் படையினரும் மோப்ப நாய்கள் சகிதம் இணைந்துகொண்டனர்.
முதற்கட்டமாக, சுமார் பதினொரு பேர்வரை பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வியட்நாமை சேர்ந்தவர்கள் என்றும் இந்தோனேஷியாவிலிருந்து படகு மூலம் நேரடியாக வந்திருக்கிறார்கள் என்றும் பூர்வாங்க விசாரணைகளில் அறியவந்துள்ளது. இவ்வாறு கைதானவர்களில் ஒருவர் தான் டக்ஸி ஓட்டுனர் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
படகில் வந்தவர்கள் மொத்தம் 27 பேர் என்று விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர். பற்றைகளிலும் காடுகளிலும் பதுங்கியிருக்கும் ஏனையவர்களை தாங்கள் தேடி வருவதாகவும் கைதானவர்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை உறுதி செய்திருப்பதாகவும் கரையோர காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
