தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா துணை அதிபர் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தி வந்ததிலிருந்து இந்தியாவின் பெரும்பகுதி கமலா ஹாரிஸின் இந்திய தொடர்பைக் கொண்டாடி வருகிறது.
எனவே கமலாவின் தமிழ் பின்னணி என்ன என்று நாமும் தேடினோம். கமலா ஹாரிஸின் மாமா பாலச்சந்திரன் கோபாலன் அவர்களை SBS தமிழுக்காக தொடர்புகொண்டு பேசினோம்.
முற்போக்கான கொள்கைகளுடன் தனது மகள்களை கமலாவின் தாய் ஷியாமளா கோபாலன் வளர்த்ததாக டெல்லியைச் சேர்ந்த கல்வியாளரான கமலாவின் தாய்மாமன் பாலச்சந்திரன் கோபாலன் கூறுகிறார்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைச் சேர்ந்தவர் கமலாவின் தாயார் ஷியாமளா கோபாலன். கமலாவின் தந்தை Donald J. Harris ஜமைக்கா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர். அவர் ஒரு பொருளாதார பேராசிரியர் ஆவர்.
ஷியாமளா கோபாலன் - Donald Harris யின் இரண்டு குழந்தைகளில் ஒருவர் கமலா.
“கமலாவின் குடும்ப விழுமியங்கள் அவளுடைய மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தின என்கிறார் பாலச்சந்திரன் கோபாலன்.
“சிறுவயதில் இருந்தே கமலாவின் திறனை அறிந்திருப்பதால், இது எங்கள் குடும்பத்திற்கு ஆச்சரியமல்ல” எகிறார் அவர்.
"திங்க் பிக்" “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்பது கமலாவின் வாழ்க்கை தத்துவமாக இருந்தது. இப்போதும் அப்படியே கமலா செயல்படுகிறார் என்கிறார் அவர்.
கமலாவின் தாயார், ஷியாமளா கோபாலன் சிவில் உரிமைகள் இயக்கத்தில் தீவிரமாக பங்காற்றியவர். பின்னர் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளராக மாறினார்.
"மனித உரிமைகள் பேணுதல் எனும் பண்பு அவரது மறைந்த தாய் ஷியாமளாவால் கமலாவுக்குள் புகுத்தப்பட்டது. ஷியாமளா தனியாக அமெரிக்கா செல்ல விரும்பியபோது, எங்கள் குடும்பத்தில் யாரும் அவர்களை தடுக்கவில்லை” என்கிறார் கமலாவின் மாமாவும், ஷியாமளாவின் சகோதரருமான பாலச்சந்திரன் கோபாலன்.
“நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்” என்பது அவர்களின் குழந்தைகளை வளர்ப்பதில் எங்கள் பெற்றோர் கடைபிடித்த முற்போக்கான கொள்கை. அதையே ஷியாமளாவும் கடைபிடித்தாள் என்கிறார் அவர்.
ஷியாமளா கோபாலன் குடும்பத்தின் விழுமியங்கள் கமலாவிடம் புகுத்தினார் என்றும் அவளை ஒரு தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக மாற்றினார் என்றும் பாலச்சந்திரன் கூறுகிறார்.
ஷியாமளாவின் வளர்ப்பு கமலாவின் உயர்வுகளுக்கு பக்க பலமாக இருந்தது என்றும், கலிபோர்னியாவின் முதல் கறுப்பின பெண் அட்டர்னி ஜெனரலாகவும், அமெரிக்க செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்காசிய பாரம்பரியத்தின் முதல் பெண்மணியாகவும் கமலா மாற வழியமைத்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
“ஏன் நடக்கவில்லை என்று உட்கார்ந்து பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, காரியத்தில் இறங்க வேண்டும்” என்று ஷியாமளா எப்போதும் கமலாவிடம் கூறுவாள்.
கமலா இந்த அளவுக்கு உயர அவரின் உயர்ந்த நோக்கம் மற்றும் பொதுமக்களால் முடிந்தவரை நல்லதைச் செய்ய அவரது தாயார் ஷியாமளா தந்த ஊக்கம் ஆகியவையே காரணம் என்கிறார் பாலச்சந்திரன்.
“தனது தாயார் ஷியாமளா எனது வாழ்க்கையில் ஒரு முக்கிய காரணியாகவும், மிகப்பெரிய உத்வேகமாகவும் இருந்ததாகவும், தனது தாத்தா என்னில் ஆரம்பகால தாக்கம் செலுத்தியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்” என்றும் தனது நினைவுக் குறிப்பான The Truths We Hold: An American Journey எனும் நூலில் கமலா குறிப்பிட்டுள்ளார்.
“கமலாவும் அவரது சகோதரி மாயாவும் குடும்ப விடுமுறைக்காக சென்னை வந்தபோது, தாத்தா பாட்டியை சந்தித்தபோது எங்கள் தந்தை கோபாலன் அவர்களுடன் கணிசமான நேரத்தை செலவிடுவார்” என்கிறார் பாலச்சந்திரன்.
மட்டுமல்ல குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வது, எங்கள் மூதாதையர் பற்றிய கதைகளை அவர்களிடம் கூறுவது, வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் பற்றி கூறுவது என்று பலவற்றை செய்ததை தாம் நேரில் கண்டிருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறுகிறார்.
மனித உரிமை, குடிமை பிரச்சினை, பொது சேவை எனும் பல அம்சங்களில் தங்கள் தந்தை கோபாலம் கமலாவையும், மாயாவையும் ஊக்கப்படுத்தினார் என்று நம்மிடம் விவரித்தார் கமலா ஹாரிஸின் மாமா பாலச்சந்திரன் கோபாலன்.
