2019-ஆம் ஆண்டுக்குரிய முதலாவது கருத்துக்கணிப்பில் ஆளுங்கட்சிக்கான முதன்மை வாக்குகள் 2 வீதத்தால் அதிகரித்துள்ளது. எனினும் இருகட்சி விருப்பு அடிப்படையில் எதிர்கட்சியான லேபர் கட்சி 53-47 என தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
இதன்படி தேர்தல் ஒன்று தற்போது நடைபெறுமானால் ஆளுங்கட்சி 14 ஆசனங்களை இழக்கக்கூடும் என The Australian-இல் இன்று வெளியான கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது.
இருப்பினும் கடந்த டிசம்பர் மாதம் வெளியான கருத்துக்கணிப்பில் இருகட்சி விருப்பு அடிப்படையில் லேபர் கட்சி 55-45 என முன்னிலை வகித்திருந்த நிலையில் இம்முறை ஆளுங்கட்சிக்கான மக்கள் ஆதரவு 2 புள்ளிகளால் அதிகரித்துள்ள அதேநேரம் லேபர் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் லேபர் கட்சியின் முதன்மை வாக்குகளும் 3 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
இதேவேளை மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக Scott Morrison அவர்கள் எதிர்கட்சித் தலைவர் Bill Shorten-ஐ விடவும் 43-36 என தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார். இதற்கு முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடும்போது Scott Morrison-க்கான மக்கள் செல்வாக்கு 2 புள்ளிகளால் குறைவடைந்துள்ளதுடன் Bill Shorten-க்கான மக்கள் செல்வாக்கு 1 புள்ளியால் அதிகரித்துள்ளது.
