ஆஸ்திரேலியாவின் கடல் எல்லையைப் பாதுகாக்கும் நோக்குடன் Triton drones என்று பெயரிடப்பட்டிருக்கும் ஆளின்றி பறக்கும் அதிநவீன போர் விமானங்களை பெரும் பொருட் செலவில் வாங்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஆயுத மற்றும் வான்வழி போர் தளபாடங்களை தயாரிக்கும் Northrop Grumman Corporation எனும் நிறுவனத்திடமிருந்து ஏழு பில்லியன் டாலர் ($7 billion) செலவில் ஆறு Triton drones போர் விமானங்களை வாங்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. உலகில் ஆயுத விற்பனை செய்யும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் Northrop Grumman Corporation நிறுவனம் ஆஸ்திரேலியாவுக்காக இந்த ஆளின்றி பறக்கும் Triton drones அதி நவீன போர் விமானங்களை தயாரிக்கிறது. இந்த விமானங்களின் உதவியுடன் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள் நுழையும் எதிரி கப்பல்களை உடனடி கண்டறிய முடியும் என்றும், சீனா உரிமை கோரும் தென் சீனக் கடலில் (South China Sea) மேற்பரப்பில் பறந்து தகவல் சேகரிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும், சட்டத்திற்கு புறம்பாக படகுகளில் ஆட்களை அல்லது புகலிடம் கோருவோரை ஏற்றிவருவோரை அந்த படகுகள் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள் வரும் முன்பே கண்டறிந்துவிட முடியும் என்றும் அரசு இந்த Triton drones நவீன விமானங்கள் வாங்குவதை நியாயப்படுத்துகிறது.
நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு பறக்கும் போயிங் விமானம் போன்று பெரிய இறகுகளுடன் பறக்கும் இந்த Triton drones ஆளின்றிப்பறக்கும் இந்த விமானம் தரை இறங்காமல் 24 மணி நேரம் தொடர்ந்து பறக்க இயலும் என்றும், அறுபதாயிரம் (60,000 feet) அடி உயரத்தில் இது பறக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் ஏழு ஆண்டுகளில், அதாவது 2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய விமானப் படையில் இணைக்கப்படவிருக்கும் Triton drones விமானங்கள் தெற்கு ஆஸ்திரேலியாவின் Edinburgh நகரின் RAAF தளத்திலிருந்து இயங்கும்.
