சிட்னி மார்ட்டின் சதுக்கத்திலுள்ள லிண்ட் சிற்றுண்டி உணவகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த சம்பவத்தில் தமது கடமையைச் செய்து இழப்புக்களை தவிர்ப்பதற்கு தனக்கோ தனது சினைப்பர் படையணிக்கோ அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்து நியூசவுத் வேல்ஸ் பொலீஸாருக்கு எதிராக குறிப்பிட்ட சம்பவத்தில் பங்குகொண்ட சினைப்பர் படையணி தலைவர் வழக்கு தொடுத்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு டிசெம்பர் 15 ஆம் திகதி மேற்படி சம்பவத்தில் துப்பாக்கிதாரியால் சுமார் 17 அப்பாவிப்பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்தனர். பல மணிநேர தாமதத்தின் பின்னர் அடுத்த நாள் அதிகாலை உணவகத்தினுள் சென்று பொதுமக்களை காப்பாற்றுவதற்கு முயன்ற படையினருக்கும் துப்பாக்கிதாரிக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டார்கள்.
இந்த முற்றுகையை முறியடிப்பதற்கு சினைப்பர் படையணி உட்பட பல்வேறு படைப்பிரிவினர் மார்ட்டின் சதுக்கத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தமது கடமையைச் செய்ய அனுமதித்திருந்தால் நிச்சயம் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பர் என்றும் இருவரது உயிரிழப்புக்களைக்கூட தவிர்த்திருக்கமுடியும் என்றும் அதற்கு நியூசவுத் வேல்ஸ் பொலீஸ் அனுமதி தரவில்லை என்றும் கூறி இதனால் தான் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து 30 பக்க சிவில் வழக்கொன்றை குறிப்பிட்ட சினைப்பர் படையணி தலைவர் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி சிட்னி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சிவில் வழக்கு அடுத்த வருடம் ஒரு நாள் அமர்வில் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
