'ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வருபவர்களை தடுத்து வருவதாகவும் எல்லைகளைப் பாதுகாத்துவருவதாகவும் அமைச்சர் Peter பிரச்சாரம் செய்துவருவதைப்போல ஆஸ்திரேலியாவுக்கு வருகின்ற சட்டவிரோத குடிவரவாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை. கடந்த நான்கு வருடங்களில் விமானங்கள்மூலம் வந்து புகலிடம் கோரிய சட்டவிரோத குடிவரவாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரம் ஆகும்'- என்று லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Kristina Keneally தெரிவித்துள்ளார்.
லேபர் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள Anthony Albanese தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சரவையில் Peter Dutton-இன் உள்துறை அமைச்சுக்கான பேச்சாளராக Kristina Keneally நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் Peter Dutton பிரச்சாரம் செய்துவருகின்ற அவரது கொள்கைகளின் உண்மைத்தன்மைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக கூறியுள்ள Kristina Keneally , ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் வந்து இறங்குவதற்கு Peter Dutton தான் மிகப்பெரிய காரணம் என்றும் அவர் பிரச்சாரம் செய்துவருவதைப்போல அவரது நடவடிக்கைகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களில் விமானங்களில் வந்து புகலிடம் கோரிய சுமார் 81ஆயிரம் சட்ட விரோத குடிவரவாளர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான அகதிகள் இல்லை என்றும், படகுகளில் சட்டவிரோதமாக வந்துள்ள அகதிகளிலும் பார்க்க இவர்களின் நிலை சிக்கல் குறைந்தது என்றும், இருப்பினும் இவர்களுக்கு பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் Kristina Keneally தெரிவித்துள்ளார். இவர்களது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டுள்ளதன் மூலம் Peter Dutton சட்டவிரோத குடிவரவினை ஊக்குவிக்கிறாரே தவிர தடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைப்பாதுகாப்பு மற்றும் படகுகளை திருப்பி அனுப்புதல் ஆகிய கொள்கைகளில் தனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றாலும் அகதிகளை இன்னமும் மனிதாபிமானத்தோடு நடத்தலாம் என்றும் Kristina Keneally கூறியுள்ளார்.
இன்றைய நிலையில் விண்ணப்பங்கள் பெருவாரியாக அதிகரித்துள்ளன. தங்களது துணைகளோடு இணைவதற்காக இரண்டு வருடங்களுக்கு மேலாக பலர் காத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வதிவிட உரிமையைப்பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 30 ஆயிரம் என்று தரவுகள் கூறுகின்றன. இவை அனைத்திலும் லேபர் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக Kristina Keneally தெரிவித்துள்ளார்.
Share
