கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக பல மாதங்களாக வீடுகளில் அடைபட்டிருந்த சிறுவர்களை உடல் ஆரோக்கியத்துடன்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு ஊக்குவிக்கும்வகையில் விக்டோரிய அரசு இலவச கூப்பன்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
சுமார் நான்கரைக்கோடி டொலர்களை இந்த உதவிக்காக ஒதுக்கீடு செய்துள்ள விக்டோரிய அரசு, சிறுவர்கள் தங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்கு தலா 200 டொலர் கூப்பனை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒரு லட்சம் விக்டோரிய சிறுவர்கள் இந்த 200 டொலர் 'Get Active Kids' கூப்பனை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதும் எந்த அடிப்படையில் கூப்பன் விநியோகம் இடம்பெறவுள்ளது என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதைவிட, அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விளையாட்டு நடவடிக்கைகளுக்கான உதவியாக இரண்டுகோடி 40 லட்சம் டொலர்களை வழங்கவுள்ளதாகவும் விக்டோரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த வருட ஆரம்பத்தில் விசேட உடற்பயிற்சிக்குழுவினர் மாநிலமெங்குமுள்ள சுமார் 800 பாடசாலைகளுக்குச் சென்று, மாணவர்கள் - ஆசிரியர்கள் அனைவருக்கும் விசேட உடற்பயிற்சி வகுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
