தேர்தல் தோல்வியையடுத்து லேபர் தலைமைத்துவ பதவியிலிருந்து விலகுவதாக Bill Shorten அவர்கள் அறிவித்துள்ளநிலையில் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது துணைத்தலைவராக இருக்கும் Tanya Plibersek லேபர் தலைமைத்துவத்திற்கான போட்டியில் குதிப்பதுபற்றி ஆலோசித்துவருவதாக அறிவித்துள்ளார்.
அதேபோன்று லேபர் முக்கியஸ்தர்களான Anthony Albanese, Chris Bowen ஆகியோரும் தலைமைத்துவ பதவிக்காக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தவிர குயின்ஸ்லாந்து எம்.பி Jim Chalmers-உம் இப்போட்டியில் குதிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் பிரதமர்களான Kevin Rudd மற்றும் Julia Gillard ஆகியோருக்கிடையில் எழுந்த தலைமைத்துவ சவால்களையடுத்து எழுந்த குழப்பங்களின் மத்தியிலும் கடந்த 2013-ம் ஆண்டு முதல் Bill Shorten அவர்கள் மிகவும் கடினமான எதிர்கட்சித்தலைவர் பதவியை திறம்பட வகித்ததாக லேபர்கட்சி அங்கத்தவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க இதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட 75 வீதமான வாக்குகளின்பிரகாரம் லிபரல் நஷனல் கூட்டணி 74 ஆசனங்களையும் லேபர் கட்சி 66 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 6 ஆசனங்களையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
