'லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் தாங்கிய படகுகள் நிச்சயம் மீண்டும் ஆஸ்திரேலியாவை நோக்கி வரத்தொடங்கும். லேபர் ஆட்சியில் மனுஸ் - நவுறு தீவுகளிலுள்ள அகதிகளையும் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள்' என்று உள்துறை அமைச்சர் Peter Dutton எச்சரித்திருக்கிறார்.
வரப்போகும் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை எச்சரிக்கும்பொருட்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஆனால் லிபரல் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் தொடர்பான தங்களது கொள்கைகளில் எந்த மாற்றமும் இராது என்றும் கடுமையான எல்லைப் பாதுகாப்பு விதிகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் Peter Dutton கூறியுள்ளார்.
நியூசிலாந்து முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம், ஆண்டொன்றுக்கு மனுஸ் - நவுறு தீவுகளிலுள்ள அகதிகளில் 150 பேரை அந்த நாட்டுக்கு அனுப்புவது என்ற விடயத்தை ஆஸ்திரேலியா முற்றுமுழுதாக மறுதலிக்கவில்லை. ஆனால், அந்த முடிவுக்கு இணங்குவது ஆஸ்திரேலியாவின் நலன்சார்ந்த தீர்மானங்களுக்கு உவப்பானது அல்ல என்பதே ஆஸ்திரேலியாவின் முடிவு என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தனது கோரிக்கையை முன்வைத்துவரும் நியூசிலாந்து அரசு, மனுஸ்- நவுறு தீவுகளிலுள்ள அகதிகளில் 150 பேரை தாங்கள் ஏற்றுக்கொள்ளத்தயார் என்று ஆஸ்திரேலியாவின் பல அரசியல் தலைவர்களிடம் எடுத்துக்கூறியுள்ளது.
இது குறித்து Peter Dutton மேலும் கூறும்போது - நியூசிலாந்து அரசு கோருவதுபோல அகதிகளை அந்நாட்டுக்கு அனுப்பினால், அந்தப்பொறிமுறையானது அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு பின்கதவால் வருவதற்கு வழிசமைத்ததுபோலாகிவிடும். ஏனெனில், நியூசிலாந்துக்கு சென்று அந்நாட்டு குடியுரிமையைப்பெற்றுக்கொள்ளும் எவரும் ஆஸ்திரேலியாவுக்கு வரலாம். ஆகவேதான் இந்த விடயத்தை மிகக்கவனமாக கையாளவேண்டியிருக்கிறது- என்று கூறினார்.
