லிபரல் கட்சியின் இரண்டு மூத்த அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக அவர்களிடம் பணிபுரிந்த இரண்டு பெண்கள் பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக "The Age" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாக தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்த லிபரல் கட்சியின் பெண் உறுப்பினர்கள், கட்சியின் உயர்மட்டத்துக்கு இவை பற்றி தெரிவித்திருந்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினர்.
அமைச்சர் ஒருவருக்கு கீழ் பணிபுரிந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் பிரகாரம், அவர் தனது ஆடையைக் களைய முற்பட்டார் என்றும் இன்னொரு பெண் முன்வைத்த முறைப்பாட்டில், பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்து முறைகேடாக நடந்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது.
சம்பவங்கள் தொடர்பாக இரண்டு பெண்களும் பொலீஸ் முறைப்பாடு எதுவும் மேற்கொள்ளாதபோதும், இவை தொடர்பில் கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.
மூத்த பெண் அரசியல்வாதியிடம் இதுபற்றி அப்போது முறையிட்டபோது அவர்கூட, இந்த சம்பவத்தை வெளியில் பேசினால், நன்மதிப்பு கெட்டுவிடும் என்று ஆலோசனை கூறி தட்டிகழித்துவிட்டார் என்று இந்தப்பெண்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
தங்களது முறைப்பாடுகள் குறித்து கட்சி கவனத்திற்கொண்டு கட்சிக்குள் காணப்படும் இவ்வாறான ஒழுக்கமீறல்கள் களையப்படவேண்டும் என்று அந்தப்பெண்கள் தெரிவித்தனர்.
