விக்டோரியர்கள் நாளை முதல் வெளியில் இருக்கும்போது(outdoors) முகக்கவசங்களை அணிவது கட்டாயமில்லை என்றும் ஆனால் மக்கள் செறிவான இடங்கள் மற்றும் சமூ இடைவெளியை பேணுவதற்கு சிரமம் மிகுந்த இடங்களென கருதும் இடங்களில் நிச்சயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் Premier Daniel Andrews அறிவித்துள்ளார். அதேநேரம் indoors எனப்படும் உட்புறங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவர் கூறியுள்ளார்.
இந்த நடைமுறையை இறுக்கமாக பின்பற்றுவது விக்டோரியர்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட பொறுப்பு என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விக்டோரியாவில் 23 நாட்களாக புதிதாக கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகாத நிலையில், மாநிலத்தில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக இன்று காலை அவர் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
முகக்கவசம் அணிவது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளித்தபோது - உதாரணமாக ஒரு அங்காடிக்குள் போகின்றபோது அங்கு மக்கள் கூட்டத்தின் அங்கமாகிவிடுகிறோம். ஆகவே, அங்கு முகக்கவசம் அணிவது கட்டாயம். ஆனால், அங்காடியை விட்டு வெளியேறியபின்னர், முகக்கவசம் அணியவேண்டிய அவசியமில்லை. பொதுஇடங்கள், மக்கள் கூட்டமாக கூடுகின்ற பூங்காக்கள், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, வரிசையில் நிற்கின்ற சந்தர்ப்பங்கள் உட்பட சமூக இடைவெளியை பேணுவது சவாலுக்குரியதாக கருதும் சந்தர்ப்பங்களில் முகங்கவசங்களை அணியவேண்டும். விக்டோரியாவில் கொரோனா தொற்றினை தற்போதுள்ள நிலைக்கு கட்டுப்படுத்தியதில் முகக்கவசம் மிகப்பெரிய பங்களித்திருக்கிறது. ஆகவே, அந்த பாதுகாப்பு நடைமுறையை சுயபொறுப்புடன் தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமானது - என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல்( ஞாயிறு11.59pm) தளர்த்தப்படும் ஏனைய கட்டுப்பாடுகள்:
நாளொன்றில் வீடுகளுக்கு அனுமதிக்கப்படும் விருந்தினர் எண்ணிக்கை இரண்டிலிருந்து பதினைந்தாக உயர்த்தப்படுகிறது. டிசெம்பர் நடுப்பதியிலிருந்து இந்த எண்ணிக்கை முப்பதாக அதிகரிக்கப்படும்.
பொது இடங்களில் கூடுவோரின் எண்ணிக்கை ஐம்பதாக அனுமதிக்கப்படுகிறது.
உணவகங்கள் உள்ளிட்ட hospitality துறைசார் இடங்களில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, உட்புறத்தில் 100 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.
மதவழிபாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உட்புறத்தில் 150 பேரும் வெளியே 300 பேர் வரையிலும் கலந்துகொள்ளலாம்.
திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதிநிகழ்வுகளில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு150 பேர் வரை கலந்துகொள்ளமுடியும். வீடுகளில் நடைபெறும் திருமண நிகழ்வு எனில் 15 பேர் என்ற விதிக்கு கட்டுப்பட வேண்டும்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
