பல்கலாச்சாரத்திற்கு பிரசித்தம் வாய்ந்த விக்டோரியா மாநிலம் தென் அரைக் கோளத்தின் மிகப்பெரும் கருங்கல் கோயிலையும் இப்போது தன்னகத்தே கொண்டுள்ளது.
விக்டோரியாவில் ஆகம முறையில் கட்டப்பட்ட விநாயகருக்கான முதற்கோயிலான ஸ்ரீ வக்ரதுண்ட விநாயகர் ஆலயம், நான்கு மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கிறது.
மெல்பேர்ன் பேசின் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின் பதினொரு சந்நிதிகளும் கருங்கல் சந்நிதிகளாக மாற்றப்பட்டு, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றும், தமிழர் கட்டடக்கலைக்கு சான்றாக விளங்குவதுமான இந்தியாவின் தஞ்சாவூர் பெரியகோயிலை ஒத்த கலைநுணுக்கங்களுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

Top view of Ganesha Shrine Source: Supplied
பிரசித்தி பெற்ற சோழ பரம்பரைக் கோயில்களே தனது படைப்பாற்றலைத் தூண்டிவிட்டதாகவும், இதன்காரணமாக திராவிட கட்டடக்கலை நுணுக்கங்களுடன் இக்கோயிலை வடிவமைத்துள்ளதாகவும் தெரிவித்தார் இக்கருங்கல் படைப்பின் கர்த்தா புருஷோத்தமன் ஜெயராமன்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இக்கோயிலை இவ்வளவு பொருட்செலவில் புனரமைப்பதற்கான தேவை என்ன என்ற கேள்வி பலருக்கு எழலாம்.

Stapathy Purushothaman Source: Supplied
ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்துள்ள இந்துக்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிற காரணத்தால் அதற்கேற்றாற்போல் தேவைகளும் வசதிகளும் ஆலயத்தின் பரிமாணங்களும் மாற்றியமைக்கப்படவேண்டியது காலத்தின் தேவை எனச் சொல்கிறார் மெல்பேர்ன் விநாயகர் இந்து சங்க நிர்வாகக் குழுத்தலைவர் திரு. பாலா கந்தையா.
அதுமட்டுமல்ல சமயத்தை வளர்க்கும்பணியில் இளைய சமுதாயம் மூத்த தலைமுறையைப்போல உத்வேகமாக செயற்படுவதற்கான நேரகாலம் இந்நவீன யுகத்தில் இருக்குமா என்பதும் கேள்விக்குறி என்பதால் தீர ஆராய்ந்து இந்த புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் அதற்காக இவ்வளவு பணம் செலவிடப்பட வேண்டுமா என்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றனவே என்று கேட்டதற்கு,

President Balaa Kandiah with Stapathy and workers Source: Supplied
முதலில் இக்கோயிலை புனரமைப்பற்கென 2.5 மில்லியன் டொலர்கள் மட்டுமே செலவிட திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பல பக்தர் இக்கோயிலுக்கான நிதியுதவியை செய்யவிரும்பியதையடுத்து அதிகளவு நிதிசேர்ந்ததாலும் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்கவும் இத்தொகை கோயிலில் செலவிடப்படுவதாக திரு.பாலா கந்தையா குறிப்பிட்டார்.
சரி, அப்படியென்னென்ன சிறப்புகள் இக்கோயிலுக்கு இருக்கின்றன?
இக்கோயிலுக்கான முழுக்கருங்கல்லும் தமிழ் நாட்டின் ஒரே கல்-அகழ் இடத்திலிருந்து பெறப்பட்டது.
விநாயகரின் மூலஸ்தானம் தனியாகவே, கையால் செதுக்கப்பட்ட பதினேழு கருங்கல் அடுக்குகளால் ஆனது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ளது போல் இங்கும் விமானத்தின்(மூலஸ்தானத்திற்கு மேற்பகுதி) சிகரம் ஆறு தொன் எடையுள்ள ஒரே கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.

Vinayagar shrine Source: Supplied
கோயில் கட்டுமானம் மிக நுணுக்கமான கணிப்புகளின் அடிப்படையில் வரையப்பட்டு, கட்டிட பாரம் பக்கங்களால் தாங்கப்படும் வகையில் ஒவ்வொரு கல்லும் அடுக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட ஐஐடி நிபுணர்களிடம் கணக்கீடுகள் சரிபார்க்கப்பட்ட பின் ஆஸ்திரேலியாவின் தகுதி பெற்ற பொறியியளாலர்களிடமும் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்லையும் செதுக்கப் பாரம்பரிய உபகரணங்களும் நவீன உபகரணங்களும் ஒருங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.

Sculpting the granite stone Source: Supplied
சகல சந்நிதிகளும் கையால் வடித்த விநாயகர் சிலைகளுடன் சேர்ந்து யானைகள், மயில்கள், சிங்கங்கள் மற்றும் தாமரை போன்ற சிற்பங்களால் மெருகூட்டப்பட்டுள்ளன.
இதேவேளை தமிழர்களின் பாரம்பரிய கட்டடக்கலையின் சிறப்புக்களை உள்ளடக்கி இக்கோயில் ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ள பின்னணியில், ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் அடையாளங்களை அவர்களது சிறப்புக்களை உள்ளடக்கும் அம்சங்கள் ஏதாவது இக்கோயிலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை நாம் எழுப்பியிருந்தோம்.

Hand carved peacocks Source: Supplied
தற்சமயம் பூர்வீககுடிமக்களின் அடையாளங்களை பறைசாற்றும் அம்சங்கள் எதுவும் இல்லையென்றபோதிலும் எதிர்காலத்தில் இவற்றை சேர்த்துக்கொள்வது தொடர்பில் நிர்வாகக்குழுவினர் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என திரு.புருஷோத்தமன் ஜெயராமன் தெரிவித்தார்.

Melbourne Vinayagar Hindu Sangam Executive Committee and Building Committee Source: Supplied
திரு.பாலா கந்தையா மற்றும் திரு.புருஷோத்தமன் ஜெயராமன் ஆகியோரது நேர்காணலை கீழ்க்காணும் இணைப்பில் கேட்கலாம்:
ஆஸ்திரேலிய கட்டடக்கலை வல்லுநர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட திறமை மிக்க கைவினைஞர்களது கைவண்ணத்தில் உருவாகியுள்ள இக்கலைவண்ணத்தை பொதுமக்கள் பார்வையிடமுடியாத நிலையை கொரோனா பரவல் ஏற்படுத்தியிருக்கிறது.
கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கோயில் மூடியிருப்பதால் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்க முடியாதநிலையில் நிர்வாகக் குழு உள்ளதாகவும் முடக்கநிலை தீர்ந்தபின் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் எனவும் மெல்பேர்ன் விநாயகர் இந்து சங்க நிர்வாகக் குழுத்தலைவர் திரு. பாலா கந்தையா தெரிவித்தார்.

Vinayagar shrine Source: Supplied