மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள அகதிகளுக்கான அத்தியாவசிய மருத்துவசேவைகளை ஆஸ்திரேலிய அரசு வழங்கவில்லை என சர்வதேச மன்னிப்புச்சபை-Amnesty International குற்றம்சாட்டியுள்ளது.
குறித்த முகாமிலுள்ள அகதி ஒருவர் கடந்த ஆண்டு பெப்ரவரியில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக இன்னமும் காத்திருப்பதாகவும், அங்குள்ள பலர் ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனை பெறவேண்டிய நிலையில் உள்ளதாகவும் Amnesty International வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுஸ் தீவில் உள்ள அகதிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கிவந்த "IMHS’ அமைப்பின் ஒப்பந்த பணிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்ததையடுத்து, Pacific International Hospital (PIH) என்ற அமைப்பு அங்குள்ளவர்களுக்கு மருத்து வசதிகளை வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால் தேவைப்படும் மருத்துவசேவைகளை உரிய நேரத்திற்குள் PIH-ஆல் வழங்கமுடியும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என Amnesty International-இன் அகதிகள் தொடர்பான ஒருங்கிணைப்பாளர் Dr Graham Thom தெரிவித்தார்.
மேலும் உளவியல் பாதிப்புகள், புற்றுநோயென சந்தேகிக்கப்படும் கட்டிகள், சிறுநீரக கற்கள் மற்றும் வயிற்றுக்கோளாறு போன்றவற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக மனுஸிலுள்ள பல அகதிகள் நீண்டநாட்கள் காத்திருப்பதாகவும், சிகிச்சை வழங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு வசதிகள் இல்லாததால் மருத்துவமனைக்குச் செல்லும் பலர் திருப்பியனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு, மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாமிலுள்ளவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டுவருவதாக கூறியுள்ளது.
Share
