மானுஸ் தீவில் உள்ள புதிய இடைத்தங்கல் மையத்தில் தங்கியுள்ள அகதிகளை அங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகள் உயிர் அச்சுறுத்தல் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 10ஆம் திகதி காலை West Haus இடைத்தங்கல் மையத்திற்குள் நுழைய முயன்ற நான்கு ஆண்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்திய போது அவர்களில் ஒருவர் கையில் இரும்பு தடிகள் வைத்திருந்ததாகவும் இடைத்தங்கல் மையத்தில் உள்ள அகதிகளை நோக்கி கொன்று விடுவோம் என்று கத்தியதாகவும் மையத்தில் உள்ள அகதிகள் கூறியுள்ளனர். இதன் போது தாங்கள் படம் பிடித்த காணொளி ஒன்றையும் அகதிகள் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் Hillside Haus இடைத்தங்கல் மையத்திலும் இவ்வகையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடைத்தங்கல் மையங்கள் உள்ளூர்வாசிகள் வசிக்கும் கிராமங்களுக்கு அருகில் இருப்பதனாலேயே அவ்வகையான அச்சுறுத்தல்கள் நடைபெறுகின்றன என்றும் சொல்லப்படுகிறது.
மானுஸ் தீவு தடுப்பு முகாம் அக்டோபர் 31ஆம் திகதி மூடப்பட்டதற்கு பிறகு அங்கிருந்து வெளியேற மறுத்த புகலிடக்கோரிக்கையாளர்கள், இரண்டு வாரங்களுக்கு முன்னர் பலவந்தமாக இடைத்தங்கல் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறியே இப்புகலிடக்கோரிக்கையாளர்கள் மூடப்பட்ட முகாமிலிருந்து வெளியேற மறுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 60 புகலிடப்கோரிக்கையாளர்கள் தங்களின் அமெரிக்க குடியமர்வு விண்ணப்பங்கள் நேர்காணலுக்காக இவ்வாரம் Port Morsbyக்கு அழைத்துச்செல்லப்பட உள்ள நிலையில் நூற்றுக்கு அதிகமான புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களின் நிலை தெரியாமல் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share
