லண்டனில் அப்பாவிப்பொதுமக்களை கத்தியால் குத்தி படுகொலை செய்ய முயற்சித்தபோது பொலீஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் தாயார் இலங்கையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் தெற்கு லண்டனில் போலி தற்கொலை அங்கியொன்றை அணிந்துகொண்டு வெடிக்கப்போவதாக மிரட்டி, மூன்றுபேரை கத்தியால் குத்திய சுதேஷ் அமான் என்ற 20 வயது நபர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதியன்றுதான் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு லண்டன் பயங்கரவாத தடுப்பு பொலீஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சுதேஷ் அமான், சிறையிலடைக்கப்பட்டார். உயர்பாதுகாப்பு சிறையில் 20 மாதங்களை கழித்து வெளியில் வந்த பின்னர் இந்த தாக்குதலில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
2018 இல் அமான் சிறைக்கு செல்லும் முன்னரே மிகப்பாரதூரமான பயங்கரவாத சிந்தனைகளோடு நடமாடிக்கொண்டிருந்தார் என்று பொலீஸார் கூறியுள்ளார்கள். வட்ஸ் அப் ஊடாக இலங்கையில் உள்ள தனது தூரத்து உறவினர்வரை அனைவருக்கும் தீவிரவாத நடவடிக்கைக்கான பிரச்சார படங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் என்றும்- தான் இறந்தால் மாவீரனாகவே இறக்கவேண்டும் என்று தனது காதலியிடம் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஐந்து சகோதரர்களுக்கு மூத்தவரான அமான் தனது தம்பிமார்களுக்கும் ஜிகாத் தொடர்பான கருத்துக்களை தீவிரமாக போதித்து வந்தார் என்றும்- தனது காதலியிடம் அவளது பெற்றோர் ஜிகாத்தை நம்பாவிட்டால் அவர்களின் தலையை வெட்டிவிடும்படி கூறியிருக்கிறார் என்றும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டன் சம்பவத்தில் நேற்றுமுன்தினம் அமான் பொலீஸாரினால் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரது தாயார் கூறும்போது - தனது மகன் மிகவும் அருமையானவன் என்றும் 20 மாத சிறை வாழ்க்கைதான் அவனது மனதை மாற்றிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் அவனுக்கு இறை நம்பிக்கை அதிகம் இருக்கவில்லை என்றும் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, அமானைச் சந்தித்தபோது மிகுந்த இறைநம்பிக்கையோடு காணப்பட்டதாகவும் கூறியுள்ளார். கொடிய குற்றவாளிகள் சிறைவைக்கப்பட்டுள்ள சிறையில் தனது மகனும் தடுத்துவைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தனது மகன் கெட்டுப்போய்விட்டான் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது மகன் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு விடுதியொன்றில்தான் தங்கியிருந்ததாகவும், தான் அவனை சென்று பார்த்ததாகவும் கூறும் அமானின் தாயார், நேற்று முன்தினம் - சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பேசும்போது - "அம்மா நீங்கள் செய்கின்ற மட்டன் பிரியாணி எனக்கு வேணும்" - என்று அமான் தன்னிடம் கேட்டதாகவும் தாயார் கூறியுள்ளார். கத்திக்குத்து சம்பவம் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளிவந்த உடனேயே அது அமானாகத்தானிருக்கும் என்று தனக்கு சந்தேகம் வந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
அமானின் தாயார் தனது ஐந்து பிள்ளைகளுடனும் லண்டனின் ஹரோ பகுதியில் வசித்துவந்துள்ளதாகவும், கணவர் வெளிநாடொன்றில் வசிப்பதாகவும், இவர்கள் குடும்பமாக சென்று அவரை பார்த்துவருவதாகவும் அயலவர்கள் கூறியுள்ளனர். வடக்கு லண்டனில் கல்வி கற்ற அமான் உயிரியல் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
