NSW காட்டுத்தீயினால் வீட்டைப்பறிகொடுத்த குடும்பஸ்தருக்கு அதிஷ்ட லாபச்சீட்டின் மூலம் ஒரு மில்லியன் டொலர் கிடைத்திருக்கிறது. தெற்கு பிறிஸ்பனின் Mount Cotton பகுதியை பூர்வீகமாக கொண்டவருக்கு இந்த அதிஷ்டம் அடித்திருக்கிறது.
கடந்த வருட இறுதியில் NSW மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் குறிப்பிட்ட நபரின் வீடு முற்றாக எரிந்து தரை மட்டமாகியது. வீட்டுக்கு காப்புறுதி செய்யாத காரணத்தினால் வீட்டை மீண்டும் நிர்மாணிக்கும் கனவும் அவருக்கு கிட்டவில்லை.
ஆனால், அண்மையில் அதிஷ்ட லாபச்சீட்டை வாங்கிய இவருக்கு அதில் ஒரு மில்லியன் டொலர் விழுந்திருக்கிறது.
தனது மனைவியின் அதிஷ்ட இலக்கத்தை சீட்டில் குறித்துக்கொடுத்ததாகவும் தனக்கு கிடைத்திருக்கும் அதிஷ்டத்தை பார்த்தவுடன் அதிர்ந்துபோய்விட்டதாகவம் அவர் கூறியுள்ளார். மீண்டுமொரு சொந்த வீடு கிடைக்கும் என்பது சாத்தியமே இல்லாமல்போயிருந்த வேளையில், தற்போது அடித்திருக்கும் அதிஷ்டம் வாழ்நாளில் மறக்கமுடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
