SKIP TO MAIN CONTENT

காதலன் உதவியுடன், கணவனுக்கு சயனைட் கொடுத்துக் கொலை!

சோஃபியா சாம் என்பவர், காதலன் அருண் கமலாசன் என்பவரின் உதவியுடன் சாம் ஆபிரகாம் என்ற பெயருடைய கணவனைப் படுகொலை செய்தார் என்று மெல்பேர்ண் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நிரூபிக்கப்பட்டு, சோஃபியா சாம் மற்றும் அருண் கமலாசன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Sam Abraham murder
Source: Supplied

2 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

 

33 வயதான சோஃபியா சாம் மற்றும் அவரது காதலன் அருண் கமலாசன் ஆகிய இருவரும் சோஃபியா சாம்மின் கணவர் சாம் ஆபிரகாமைத் திட்டமிட்டுக் கொன்றனர் என்று 14 நாட்கள் நடந்த வழக்கில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் நிறைவுற்றது.

வழக்கில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்புக் குழு (Jury) இன்று முடிவெடுத்துள்ளது.

இவர்களுக்கு என்ன தண்டனை என்பதை மார்ச் 21 அன்று நீதிபதி வழங்குவார் என்று வழக்கை விசாரித்த நீதிபதி அறிவித்தார்.

என்ன நடந்தது? எப்படி நடந்தது?

சோஃபியா மற்றும் அருண் ஆகியோர் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர்.  இருவருக்குமிடையில் பல வருடங்களாக நட்பு இருந்ததை இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

2008ம் ஆண்டு, அருண் கமலாசன் தனது மனைவியையும் குழந்தையையும் இந்தியாவிலேயே விட்டுவிட்டு, ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்துள்ளார்.  சாம் ஆபிரகாம் துபாய் நாட்டில் தொழில் பார்த்துக் கொண்டிருந்தார்.  சோஃபியா சாம் அவர்களது 6 வருட மகனுடன் ஆஸ்திரேலியாவிற்கு 2012ம் ஆண்டு குடியேறினார்.

சோஃபியா மற்றும் அருண் இருவரும் இணைய விரும்பினார்கள் என்பதைத் தத்தமது நாட்குறிப்பில் (diaryயில்) பதிந்திருக்கிறார்கள்.

துபாயில் வேலை முடித்துக் கொண்டு, சாம் ஆபிரகாம் ஆஸ்திரேலியா குடிவந்த விட்ட பின்னர் அவரைக் கொலை செய்ய, சோஃபியா மற்றும் அருண் இருவரும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் இரவு, சாம் ஆபிரகாம் அருந்தவென பழரசம் (orange juice) தயாரித்த சோஃபியா சாம், அதனுடன் சயனைட் எனும் நச்சுப் பொருளைக் கலந்துள்ளார்.  அதனை அருந்திய சாம் ஆபிரகாம் உடனேயே மரணமாகியுள்ளார்.

அவரச சேவைக்கு அழைப்பு விடுத்த சோஃபியா சாம், தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி விம்மி விம்மி அழுதுள்ளார்.

சாம் ஆபிரகாம் மரணத்தை காவல்துறை உடனேயே விசாரிக்கவில்லை.  இறந்த தனது கணவனின் உடலுடன் இந்தியாவிற்குச் சென்ற சோஃபியா சாம், சில நாட்களிலேயே ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.

சாம் ஆபிரகாம் மரணித்து 10 மாதங்களின் பின்னர், ஆஸ்திரேலிய காவல்துறை ஒரு புலனாய்வு செயற்பாட்டை முடுக்கி விட்டிருந்தது.  சோஃபியா, அருண் இருவரையும் கண்காணித்தது.  இருவருடைய தொலைபேசி உரையாடல்களையும் ஒட்டுக் கேட்டது.

இருவரும் சேர்ந்து ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள்.  சாம் ஆபிரகாம் பெயரில் இருந்த வாகனம், அருண் கமலாசன் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது.  இருவருக்குமிடையிலான காதலை அவர்கள் எழுத்தில் பதிந்துள்ளார்கள் என்றெல்லாம் இந்த புலனாய்வு விசாரணை கண்டுபிடித்துள்ளது.  ஆனால்,  காவல்துறை அந்தப் புலனாய்வை எப்படி செய்தது என்பதைப் பகிரங்கப் படுத்தத் தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோஃபியா, அருண் இருவரையும் காவல்துறை கைது செய்தது.

விசாரணையின் போது, கொலையை தான் செய்ததாகவும் சோஃபியாவிற்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அருண் காவல்துறையை நம்ப வைக்க முயற்சி செய்துள்ளார்.

2015ம் ஆண்டு ஜூலை மாதம், Lalor ரயில் நிலையம் அருகே சாம் ஆபிரகாம் தாக்கப்பட்டிருக்கிறார்.  அந்தத் தாக்குதலை நடத்தியதும் அருண் கமலாசன் தான் என, காவல்துறை தற்போது கூறுகிறது.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now