இலங்கையிலிருந்து சிட்னிக்கு வந்து மேற்படிப்பில் ஈடுபட்டிருந்த மாணவனை வேண்டுமென்றே - போலிக்குற்றச்சாட்டுக்களை புனைந்து - பொலீஸில் மாட்டிவிட்ட அஸ்லாம் கௌஜா(ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் உஸ்மான் கௌஜாவின் சகோதரர்), தான் நண்பனுக்கு குழிபறித்த கோழை என்றும் ஒரு மனிதப்பிறவியாக வெட்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
UNSW-இல் மேற்படிப்பை தொடர்ந்துகொண்டிருந்த மாணவனை, காதல் விவகாரத்தினால் - பொறாமை கொண்டு - அஸ்லாம் கௌஜா, குறிப்பிட்ட மாணவர் முன்னாள் பிரதமர் மல்கம் ரேன்புல்லை கொலை செய்யத்திட்டமிட்டார் என்றும் Opera House-ற்கு குண்டுவைக்க திட்டமிட்டார் என்றும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை புனைந்து, பொலீஸில் மாட்டிவிட்டார்.
இந்த குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் உடனடியாக கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட இலங்கை மாணவன், ஆஸ்திரேலியாவின் அதி உயர் பாதுகாப்பு சிறையில் ஒரு மாத காலம் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், அத்தனை குற்றச்சாட்டுக்களும் மீளப் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நாடகத்தின் பின்னணியில் இயங்கியவர் என்று அஸ்லாம் கௌஜா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். அந்தக்காலப்பகுதியில் தனக்கு எதிரான சாட்சிகளை மிரட்டினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், அஸ்லாம் கௌஜா தனது குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.
ஒப்புக்கொள்ளப்பட்ட குற்றங்களின் அடிப்படையில், தண்டனை வழங்கும் அமர்வு நியூசவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில்(District Court) இடம்பெற்றபோது, தனது குற்றங்களை ஒப்புக்கொண்டது மாத்திரமல்லாமல், தனக்கு நல்ல நண்பனாக இருந்த குறிப்பிட்ட இலங்கை மாணவனுக்கு தான் மிகப்பெரிய துரோகத்தையும் வலியையும் கொடுத்துவிட்டதாகவும் அவரது குடும்பத்துக்கும் பெரும் துயரைக்கொடுத்துவிட்டதாகவும் சொன்னார்.
குறிப்பிட்ட பெண்ணொருவரிடமிருந்து இலங்கை மாணவனை பிரிக்கவேண்டும் என்றும் அதன்மூலம் அந்தப்பெண்ணுடன் தான் அதிக நேரத்தை களிக்கமுடியும் என்றும் பொறாமையுடன் தான் செய்த காரியம்தான் இது என்றும், குறிப்பிட்ட இலங்கை மாணவன் கைதுசெய்யப்படவேண்டும் என தான் நினைத்ததில்லை என்றும் ஒரு மிரட்டலாக இந்தக்காரியம் அமையும் என்று நம்பியதாகவும் அஸ்லாம் கௌஜா நீதிமன்றத்தில் கூறினார்.
இதற்குமுன்னர், 2017 ஆம் ஆண்டு இன்னொரு நபரின் மீதும் இதேபோல பொறாமை கொண்டு, அவருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை தொலைபேசி வழியாக முறையிட்டதாகவும் அஸ்லாம் கௌஜா கூறினார்.
அஸ்லாம் கௌஜா தற்போது மிகக்கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் அதற்குரிய மருத்துவ வழிகளை நாடியுள்ளதாகவும் அவர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவரது சகோதரர் உஸ்மான் கௌஜா, பிரிஸ்பனிலிருந்து இணைய வழியாக நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்டு, தனது சகோதரரின் இந்தக்காரியம் அவரது வழக்கமான நடத்தைக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் உண்மையிலேயே உயரிய நற்பண்புகளுடைய இந்தநாட்டின் குடிமகன் என்றும் குறிப்பிட்டார்.
நீதிமன்றின் அடுத்த அமர்வு ஒக்டோபர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
