மேற்கு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்தவ பாடசாலையொன்றில் கல்விகற்கும் இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட மாணவி மூக்குத்தி அணிவதற்கு தடைசெய்யப்பட்டு குறிப்பிட்ட அணிகலன் பாடசாலையின் சீருடை கட்டுப்பாடுகளுக்கு முரணானது என்று பாடசாலை நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் குறிப்பிட்ட மாணவி மூக்குத்தியை கழற்றினால் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளிக்கமுடியும் என்று பாடசாலை நிர்வாகத்தினால் பணிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட மாணவியின் தாயார் இது குறித்து ஊடகத்திற்கு தெரிவிக்கும்போது - தனது மகள் மூக்குத்தி அணிவது ஆடம்பரத்துக்காக அல்ல என்றும் அது கலாச்சாரத்தின் அடையாளம் மட்டுமல்லாது மத அடையாளமும்கூட என்றும் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மாணவிகள் பர்கா அணிவதற்கு அனுமதி வழங்குவதுபோல ஏனைய மதத்தவர்கள் தங்களது பழக்கங்களை கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப்படுவதுபோல தனது மகளுக்கும் அந்த சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்று ஊடகங்களிடம் தனது கவலையை பதிவு செய்திருக்கிறார்.ஆஸ்திரேலியா என்ற தேசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு விரும்புகிறோமோ அதேயளவு எமது கலாச்சரம் குறித்த பெருமை எமக்குள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட பாடசாலை அதிபர் இது குறித்து கருத்து தெரிவித்தபோது - பாடசாலையின் சீருடை கட்டுப்பாடுகள் குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தெளிவான புரிதல் உண்டு என்றும் அவற்றின் அடிப்படையில்தான் அவர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கிறார்கள் என்றும் இணைத்துக்கொள்ளும்போது உரிய பத்திரங்களில் இதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பமிடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
