நம்மில் பலருக்கு முகப்பரு ஏற்பட்டவுடன் அதனைக் கிள்ளும் பழக்கம் இருக்கின்றது.
இப்படிச் செய்வதால் முகத்தில் வடு ஏற்படுவதுடன், கையிலுள்ள கிருமிகள் முகத்தில் பரவி இன்னும் பல முகப்பருக்கள் உருவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அதைவிடவும் பெரிய ஆபத்து ஏற்படலாம் என தோல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
நமது முகத்தில், மூக்கிலிருந்து மேல் உதடு வரையிலான முக்கோணப் பகுதி Danger Triangle என்று அழைக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் உள்ள இரத்தக் குழாய்கள் நமது மூளையுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றன.
எனவே இந்தப் பகுதியில் ஏற்படும் பருக்களைக் கிள்ளுவதன் மூலம் அந்த இடத்தில் பாரதூரமான கிருமித் தொற்று ஏற்பட்டால், மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையிழப்பு, பக்கவாதம் மற்றும் மரணம் ஏற்படும் சாத்தியம் உள்ளது என்று தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முகப்பருக்களைக் கிள்ளும் அனைவருக்கும் கிருமித்தொற்று ஏற்படும் என்று சொல்ல முடியாவிட்டாலும் எதையும் வருமுன் காப்பது சிறந்ததல்லவா?
எனவே பருக்களைக் கிள்ளும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் நன்றாக யோசித்துவிட்டு கிள்ளுங்கள்!
