மெல்பேர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் (Melbourne Immigration Transit Accommodation) தடுத்துவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.
தடுப்புமுகாமில் அடிப்படை வசதிகள் போதாது என்றும் முகாம் அதிகாரிகள் தங்களை கைதிகள் போல நடத்துகிறார்கள் என்றும் தெரிவித்து இந்தப்போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்னிலுள்ள இன்னொரு தடுப்பு முகாம் (MIDC) மூடப்பட்டதையடுத்து மெல்பேர்ன் பகுதியிலுள்ள இந்த இடைத்தங்கல் முகாம் எனப்படும் Melbourne Immigration Transit Accommodation நிலையத்துக்கு அனைத்து அகதிகளும் அண்மையில் இடம்மாற்றப்பட்டிருந்தார்கள்.
அங்குள்ள சுமார் இருநூறு பேர் இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்புமுகாமில் காணப்படும் மேசை கதிரைகள் முதல் எவையும் சரியானமுறையில் இல்லை. இரவில் எழுந்து வெளியில் போவதென்றால்கூட அதிகாரிகள்கூடவே வருகிறார்கள் என்று தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த முகாமுக்கு பாதுகாப்பு வழங்கும் தனியார் பாதுகாப்பு நிறுவனம் இது விடயமாக எந்த கருத்தும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குடிவரவு திணைக்கள அரிகாரிகளுடன் தமது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
