அதிவேக உணவுத்தயாரிப்பில் கோலோச்சிவரும் உணவகங்களில் ஒன்றான McDonald's ஆஸ்திரேலியாவில் சுமார் 500 மில்லியன் டொலர்கள் செலவில் 45 புதிய கிளைகளை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த உணவகங்கள் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் அமையுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ன் மற்றும் சிட்னியில் அதிகரித்துவரும் சனத்தொகை மற்றும் புதிய ரயில் பாதைகளின் நிர்மாணம் என்று உணவகங்களின் தேவையை கோரும் காரணிகள் பெருகிவருவதால் தங்களது கிளைகளை கூடுதலாக அமைப்பதற்கான தேவையும் அதிகரித்துள்ளது என்று McDonald's நிறுவனத்தின் Josh Bannister தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையில் திறக்கப்படும் இந்த கிளைகள் ஆஸ்திரேலியாவில் அடுத்த பத்து வருடங்களில் ஏற்படப்போகும் பல்வேறு மாற்றங்களை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஐந்து புதிய கிளைகளை திறந்த McDonald's நிறுவனம் ஆஸ்திரேலியா முழுவதும் 981 கிளைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அதீத உடற்பருமனால் அவதிப்படும் ஆஸ்திரேலியர்கள் மத்தியில் இவ்வாறான உணவகங்களின் பெருக்கமானது இன்னும் பாரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற விமர்சனம் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது.
Share
