மெல்பேர்னுக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் எரிமலை எந்நேரமும் சீற்றமடைய ஆரம்பிக்கலாம் என சில ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி செய்திவெளியிடப்பட்டுள்ளது.
மெல்பேர்ன் தொடக்கம் தெற்கு ஆஸ்திரேலியாவின் Mt Gambier வரையான பகுதிக்கு அடியில் Newer Volcanic Province (NVP) என அழைக்கப்படும் சுமார் 400 எரிமலைகள் காணப்படுவதாகவும், இவற்றில் பல செயற்பாட்டு நிலையில் இருப்பதாகவே கருதவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த எரிமலைகளில் ஒன்று சீற்றம்கொள்ள ஆரம்பித்தால், அது அண்மையில் ஹவாய் தீவில் ஏற்பட்ட Mount Kilauea எரிமலைச் சீற்றத்தைவிடவும் மோசமான ஒன்றாக இருக்கும் என டஸ்மேனியாவைச் சேர்ந்த எரிமலை ஆராய்ச்சி நிபுணர் Dr.Rebecca Carey தெரிவித்துள்ளார்.
கடைசியாக Mt Gambier பகுதியில் எரிமலைச் சீற்றம் ஏற்பட்டு 5000 ஆண்டுகள் ஆகின்ற அதேநேரம் மெல்பேர்ன் பகுதியில் எரிமலைச் சீற்றம் ஏற்பட்டு மில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகின்றபோதிலும் இவ்வெரிமலைகள் எந்தநேரத்திலும் சீற்றம் கொள்ளலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
Newer Volcanic Province 4.5 மில்லியன் ஆண்டுகளாக செயற்பாட்டு நிலையிலேயே இருப்பதாகவும், ஆகக்குறைந்தது ஒவ்வொரு 10,000 ஆண்டுகளுக்கொரு தடவை எரிமலைச்சீற்றம் இடம்பெறுவது வழக்கம் எனவும் Dr.Rebecca Carey தெரிவித்தார்.
மெல்பேர்னுக்கடியில் இவ்வாறு எரிமலைகள் உறங்கிக் கொண்டிருப்பதே பலருக்கு தெரியாது எனக் குறிப்பிட்டுள்ள Dr.Rebecca Carey, எப்போது மற்றுமொரு எரிமலைச் சீற்றம் ஏற்படும் என்பதை ஊகிக்க முடியாது என கூறியுள்ளார்.
மெல்பேர்னிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவின் Mt Gambier வரையான பகுதிகளில் எங்கெங்கு எரிமலைகள் காணப்படுகின்றன என்ற விபரம் புகைப்படங்களுடன் கீழே தரப்பட்டுள்ளது.

Volcanoes of the Newer Volcanics Province
(a) Mt Napier, SE of Hamilton (b) The Noorat complex (c) The Mt Gambier Volcanic Complex, near Mt Gambier (d) The Mt Schank Volcanic Complex, near Mt Gambier (e) Purrumbete volcano, near Camperdown (f ) Tower Hill volcano, near Warrnambool (g) The Red Rock Volcanic Complex, near Colac.(Ray Cas and co authors)
