SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் இடம்பெற்ற அகதியின் மரணம்! நடந்தது என்ன?

The Melbourne Immigration Transit Accommodation Centre.
The Melbourne Immigration Transit Accommodation Centre. Source: ABC Australia

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மெல்பேர்னில் குடிவரவுத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இடைத்தங்கல் முகாமில் கடந்த சனிக்கிழமை அதிகாலை இறந்த ஆப்கான் அகதி இளைஞனின் மரணச்செய்தியை ஆஸ்திரேலிய அரசு அவரது குடும்பத்தினருக்கு நான்கு நாட்களுக்குப்பின்னரேயே தெரியப்படுத்தியதாக பாகிஸ்தானிலுள்ள அவரது குடும்பத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.

முகாமில் இடம்பெற்ற மரணம் தொடர்பாக ஆஸ்திரேலியாவிலுள்ள ஆப்கான் சமூகத்தினர் அறிந்து, அவர்கள்தான் உயிழந்த அகதி இளைஞனின் குடும்பத்தினருக்கு உடனடியாக தெரியப்படுத்தினர் என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு கடந்த செவ்வாயன்றுதான் உத்தியோகபூர்வமாக மரணம் குறித்த தகவலை தெரிவித்திருக்கிறது என்றும் "The Age" பத்திரிகை தெரிவித்துள்ளது.

அகதி இளைஞனின் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் சேர்ப்பதற்கு அரசு அனுசரணை வழங்குவது தொடர்பாக எதுவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என்றும் The Age கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து 17 வயதில் பாகிஸ்தான் வழியாக இந்தோனேஷியா வந்த அப்துல் அஸீஸ் என்ற இந்த இளைஞன், யாருடைய துணையுமின்றி தனியாகவே ஏனைய அகதிகளுடன் படகில் ஆஸ்திரேலியா வந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்து உடனடியாக முகாமில் வைக்கப்பட்டிருந்தபோதும் தற்காலிக விசா வழங்கி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கார் திருட்டு சம்பவமொன்றில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட அஸீஸ் நான்கு மாதங்கள் குறைந்த பாதுகாப்புடைய தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பின்னர், 20 வயதில் - 2017 ஆம் ஆண்டு - குடிவரவு தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டார்.

கடந்த பத்து மாதங்களாக மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டிருந்த அஸீஸ் அண்மைக்காலமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் சம்பவம் இடம்பெற்ற அன்று வெள்ளிக்கிழமை காலை பிரார்த்தனையின் பின்னர்கூட குழம்பிய நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெள்ளியிரவு பாகிஸ்தானிலுள்ள தனது தாயாருடன் பேசிய பின்னர் இரண்டு மணி நேரத்தில் அவருடைய மரணம் சம்பவத்திருக்கிறது.

அவரது அறையில் மேல் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த அவரது அறை நண்பர், திடீரென்று பெரிய சத்தம் ஒன்று கேட்டு எழுந்து பார்த்தபோது அஸீஸ் தரையில் முகம் குப்புற விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக முகாம் அதிகாரிகளிடம் அறிவித்தபோது அவர்கள் வந்து சோதனை செய்து அம்புலன்ஸை அழைத்துள்ளார்கள்.

அஸீஸின் மரணம் மர்மமானதாக கருதப்படுவதாகவும், அது தற்கொலை என்று அவரது சில முகாம் நண்பர்கள் கூறுவதாகவும் The Age தெரிவித்துள்ளது.

விக்டோரிய மரண விசாரணை அதிகாரிகள் அஸீஸின் சடலத்தை பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்று அவரது குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர். ஆனால், சமய முறைப்படி அவரது ஜனாஸா உடனடியாக அடக்கம் செய்யப்படவேண்டும் என்ற நடைமுறையை குடும்பத்தினர் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய சட்டங்களின்படி, சந்தேகத்துக்கிடமான மரணங்கள் தொடர்பாக பிரதேச பரிசோதனைகளை மேற்கொள்வதென்பது முக்கிய படிமுறை என்பதால், விசாரணைகளுக்காக அஸீஸின் சடலம் இன்னமும் மெல்பேர்னிலேயே உள்ளது.

அஸீஸின் உறவினர்கள் பாகிஸ்தானிலிருந்து ஸ்கைப் ஊடாக The Age ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில்- இறக்கும்வரை விடுதலைக்காக ஏங்கிய தங்களது அன்புக்குரியவனின் ஜனாஸா இப்போது எங்குள்ளது என்ற தகவலே தமக்கு தெரியாது என்று கூறியுள்ளனர். அத்துடன் தங்களது மகனுக்கு என்ன நடந்தது என்பதையும் ஆஸ்திரேலிய அரசு தெரியப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தயுள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now