ஆண்களா பெண்களா உயர்ந்தவர்கள் என்று போதையில் நண்பர்களுடன் சேர்ந்து வாதத்தில் ஈடுபட்ட பின்னர் தனது ஆஸ்திரேலிய மனைவியை வெட்டிச்சாய்த்த இந்திய நபர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்தச்சம்பவம் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய நாளன்று இரவு மெல்பேர்னில் இடம்பெற்றது. அந்த கொலை வழக்கு விக்டோரிய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.
Douglas Derick Eustace என்ற இந்திய நபரே இவ்வாறு கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டு தடுப்புக்காவலில் உள்ளவர் ஆவார்.
Douglas Derick Eustace கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் Mary Freeman என்பவரை பார்த்து பழகி சிலவாரங்களிலேயே திருமணம் செய்வதற்கு சம்மதம் கேட்டுள்ளார். Mary Freeman திருமணத்துக்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து ஒக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.
கடந்த ஜனவரி 27 ஆம் திகதி இரவு ஹலம் பகுதியிலுள்ள அவர்களது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி பொழுதைக்கழித்துக்கொண்டிருந்தபோது ஆண்களா பெண்களா உயர்ந்தவர்கள் என்ற விவாதம் தொடங்கியது. சாதாரணமாக தொடங்கிய இந்த விவாதம் மிகவும் சுமூகமாகவே நடைபெற்றிருக்கிறது. ஆனால், இந்த விவாதம் முடிந்து தங்களது அறைக்கு சென்ற Douglas Derick Eustace - Mary Freeman தம்பதியினர் தொடர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு Douglas Derick Eustace - Mary Freeman ஆகியோரின் நணபர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது Mary Freeman கத்தியில் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். நண்பர்களின் முதலுதவியும் பலிக்காமல் உயிரிழந்தார்.
அதன் பின்னர், பொலீஸ் நிலையத்துக்கு சென்ற Douglas Derick Eustace தன்னை பொலீஸாரிடம் ஒப்படைத்திருந்த பின்னணியில் இந்த வழக்கு விசாரணைகள் விக்டோரிய நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். வழக்கு அடுத்த டிசெம்பர் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
